Sunday, July 6, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி.





              கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. "இனிய உதய'த்திற்காக அவரைச் சந்தித்தபோது...

எப்படி இப்படியொரு தமிழ்நடை உங்களுக்கு வாய்த்தது? 
நடத்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை அமைவதுபோலவே, எழுத்திலும் அமைகிறது. என் எழுத்து நடையில் அமைந்தது பாதி; நான் அமைத்தது பாதி. உரைநடையின் இறுக்கம் குறைக்கக் கொஞ்சம் கவிதை பெய்துகொண்டதில் ஒரு புதிய நடை உண்டாகியிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

உங்கள் பால்ய பருவத்தின் மறக்க முடியாத அனுபவம்?

ஒரு கொலை பார்த்தது- ஒரு புணர்ச்சி பார்த்தது- 11 வயதில் வெறிநாய் கடித்தது- மூன்றும் அறியாத வயதின் அதிர்ச்சிகள்.

நீங்கள் எழுதிய முதல் கவிதை?

வயல்வெளியில் பிறந்தது. அது கவிதையா- கவிதைபோல் ஒரு மொழிமுனகலா என்று எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. கவிதை கையில் இல்லை. அந்தப் பரவசம் மட்டும் பத்திரமாக.

திரையுலகக் காதலில் விழுந்தது எப்படி?

"டூரிங் டாக்கீஸ்' என்ற கலைக் கூடங்களே காரணம்; காற்றில் ஒலித்த பாடல்களே காரணம். கலைஞரின் வசன இலக்கியம்; எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற கந்தர்வ புருஷர்கள்; கண்ணதாசன் என்ற கலையாளுமை இவையே திரைக்காதலுக்குத் தோற்றுவாய் செய்தன. ஐம்பதுகளில் பிறந்த தமிழர்கள் பலருக்கும் இந்த நான்கு பேரின் பாதிப்பு இல்லாமல் இருக்காது.

நீங்கள் சந்தித்த முதல் திரைப் பிரபலம் யார்? அப்போதைய  உங்கள் மன நிலை?

நடிகர் அசோகன். டிரஸ்ட்புரத்தில் இரண்டாம் தெருவில் அவர். நான்காம் தெருவில் நான். நடைப் பயிற்சியில் சந்தித்து நண்பர்கள் ஆனோம். படப் பிடிப்புக்கெல்லாம் அவர் காரில் என்னை அழைத்துச் செல்வார். மதுரை திருமாறன்- கே.ஆர். விஜயா இருவரையும் எனக்கு அறிமுகம் செய்தார். திரைத்துறைக்கு நான் வருவேன் என்பதை அறியாத காலத்தில் அன்பு செலுத்தினார்; அவரை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

திரையுலகில் ஏமாற்றங்களையும் சங்கடங்களையும் சந்தித்தது உண்டா?

ஏமாற்றங்களும் சங்கடங்களும் அனுபவங்கள். அனுபவங்களே ஆசான்கள். "இதுவரை நான்' இரண்டாம் பாகத்தில் விரிவாய் எழுதுவேன்.

மரபை வசீகரமாகக் கையாளும் நீங்கள், புதுக் கவிதைக்கு ஏன் திசை திரும்பினீர்கள்?

ரயிலில் வந்தவன் விமானத்திற்கு மாறிய கதைதான் அது.

உங்கள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

சாதனை என்று எதைக் கருதினாலும் அது இன்று அல்லது நாளை முறியடிக்கப்பட்டுவிடும். சாதனை என்பதைவிட ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்பதே அது.


உங்கள் ஆதங்கம்?

எட்டுக் கோடித் தமிழர்கள் உள்ள நாட்டில், ஒரு புத்தகத்தின் ஆயிரம் பிரதிகள் கூட விலை போகாதது.

உங்கள் ஏக்கம்?

இலங்கைத் தமிழர் துயரம் எப்போது தீரும்?

 
உங்கள் இழப்பு?


தூக்கம்.

உங்கள் அடுத்த இலக்கு?

உங்களுக்கே தெரியும்.

உங்களை வியப்பில் ஆழ்த்திய படைப்பு?

இந்திய இதிகாசங்கள் இரண்டும்.

உங்களுக்கு யார்மீதாவது பொறாமை வந்ததுண்டா?

கோபம் வந்ததுண்டு; பொறாமை என்றால் என்ன?

உலகத் தரத்தில் தமிழிலக்கியம் இருக்கும் போது மேலைநாட்டு இலக்கியங்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் பற்றி?

முதலில் தன்னை மதிப்பது நல்லது; பிறகு தரணியை மதிப்பது உயர்ந்தது.

காலப்போக்கில் மரபுக் கவிதை காணாமல் போய்விடுமா?

தமிழ் காணாமல் போகுமா?

திரையுலகிற்கு முன் இருந்த வைரமுத்து, திரையுலகிற்குள் வந்த பின்னால் வைரமுத்து- ஒப்பிடுங்கள்.

முன்னவன்- நேரத்தில் பணக்காரன்.


பின்னவன்- நேரத்தில் ஏழை.

அரசியலில் கால் வைக்காமல் இருப்பது ஏன்?

என்னினும் சிறந்தவர்கள் அரசியலை ஆளுவதால்.

இலக்கியம், மொழியின் அலங்காரமா? ஆயுதமா?

துய்ப்பதற்கு அலங்காரம்; தொழிற்பட ஆயுதம்.

"மூன்றாம் உலகப் போர்' எப்போது நூலாக வெளிவரும்?

ஜூலை 13. சென்னை காமராசர் அரங்கில் வெளி யீட்டு விழா. இந்திய அரசியலின் மூத்த தலைவரும், தமிழின் மூத்த படைப்பாளியுமான கலைஞர் வெளியிடுகிறார். "மூன்றாம் உலகப்போர்' ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகி வருகிறது. அது சர்வ தேச அரங்கில் வெளியிடப் பெறும்.

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்


நன்றி : நக்கீரன் 
              01.07.2012

இணைப்பு : அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி.

5 comments:

  1. வணக்கம்
    ஐயா.

    நல்ல கேள்விபதில்கள் வைரத்தின் வைர வரிகளின் தொகுப்பு
    பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சுவையான தகவல்
    சிறந்த பகிர்வு

    ReplyDelete
  3. // இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை... // சிறப்பு...

    ReplyDelete
  4. 'ஒரு கொலை பார்த்தது'என்று வைரமுத்து சொல்லி இருக்க வாய்ப்பில்லை என்று என்று நினைக்கிறேன் !

    ReplyDelete
  5. கவிஞரின் முதல் பிரசவம் வயல்வெளியல் மட்டுமல்ல கயல்விழியிலும் என நினைக்கிறேன். !!!
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete