Monday, October 15, 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

• நான், தமிழ்மொழியை விரும்புபவள் என்ற கர்வம் மிகக்கொண்டவள். விரும்பியதை அணுஅணுவாய் இரசிக்கும் தன்மை கொண்டவள். 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

• நல்ல படைப்பு? படைப்புகள் அனைத்தும் படைப்பாளியின் பார்வையில் நல்ல படைப்புகளே. ஆனால், படைப்பின் பின்னணியில் படைப்பாளி தெரியாமல், முன்நிற்கும் படைப்புகளே சிறந்த படைப்புகள் ஆகின்றன. 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

• அடிமட்ட அரசியல் ஞானம் கூட இல்லை என்பதே என் கருத்து. திரைப்படங்களில் வருவது போல, மக்கள் நாயகனாய் யாரேனும் வரமாட்டார்களா என்பது போல ஓர் மாற்றத்தை நம் மக்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு, காலம்காலமாய் எதிர்பார்ப்பாக மட்டுமே உள்ளது என்பது மறுக்கமுடியா உண்மை. என்று மாறும் இந்நிலை என அனைவருமே கேட்கிறோம். மாற்றத்தை நம்மிடமிருந்து தரவேண்டும் என முன்னேற முடிவதில்லை. முன்னேறினாலும் பூஞ்சை பிடித்த இன்றைய அரசியல் மற்றவரையும் மொய்த்துக்கொள்கிறது என்பதே நிதர்சனம். 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

* பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பாலின் பங்கு எத்தகையதோ, அத்தகையதே ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு. 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

• பிறந்து, வாழ்ந்து, இறக்கும் பல இலட்சம் மக்களுள் நானும் ஒருவள் என்று இருப்பதை வெறுப்பவள். என் பேர் சொல்ல எதையேனும் விட்டுச்செல்ல வேண்டும். நான் விட்டுச்செல்லும் அந்த ஏதோ ஒன்று, ஒரு சமூகத்தை சிந்திக்க தூண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த ஏதோ ஒன்றே என் வாழ்வின் இலட்சியம்!! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 




கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 

• நான் நிற்கும் இந்த சமூகம், என்னை வளர்த்த இந்த மண் என்னைப்போல் பலரையும் கண்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வாழ்ந்த என் மண்ணின் வரலாறு எனக்கு முக்கியம். என் மூதாதையர் இல்லையேல் இன்று எனக்கு மொழி இல்லை. அவர்கள் இல்லையேல் இன்று எனக்கு நவீனம் இல்லை. அதிபுத்திசாலிகளான என் முன்னோர்களை பற்றி தெரிந்து கொண்டால் மட்டும்தான், நான் எந்த நிலையில் இருக்கிறேன், என் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும். வரலாறு இல்லாமல் எதிர்காலப் பயணம், சாவியை எடுக்காமல் வீட்டை திறப்பதற்கு சமம். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

• நூறுகோடி மக்களில் அடிமட்டத்தில், ஒரு சிறந்த வாசகன் இருக்கும்பட்சத்தில் புத்தக வாசிப்பு அழிய வாய்ப்பே இல்லை. கண்களுக்கு முன் விரியும் கணினித்திரை, புத்தகத்தின் மணமும், தாள்களை தொட்டு திருப்பும் உணர்வையும் தருவதில்லை. கணினியின் அசுர வளர்ச்சி, புத்தக வாசிப்பை எவ்வகையிலும் தடைசெய்ய இயலாது.  

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

• சமூக வலைத்தளங்கள் நாம் நம்மை பாதுகாத்துகொள்ளும் வரை, நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்து, நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் பொறுத்து பலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமைகிறது. எளிதில் புரியும்படி கூறவேண்டும் என்றால், அறிவியல் தொழில்நுட்பசாதனங்கள் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்து நமக்கு பயனுள்ளதாகவும், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும்வகையில் அமைகிறது அல்லவா? இதுவும் அவ்வாறே. கையாள தெரியவேண்டும். 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

• சங்க புலவர்கள் அனைவரும் குறிப்பாக திருவள்ளுவர். பாரதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன், இந்திரா சௌந்தரராஜன், சுபா, ரமணி சந்திரன், சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அபிராமி பாஸ்கரன், அனுஷா வெங்கடேஷ். 

புத்தகங்கள்: என்றும் நான் என்னுடனே வைத்திருப்பது திருக்குறள். மனம் சலனப்படும் போது பாரதியார் கவிதைகள். பொழுதுபோக்க எட்டுத்தொகை. சங்ககால வாழ்வியலை அறிந்துகொள்ள பத்துப்பாட்டு. திருப்பாவை, தேவாரம் இறைபக்திக்கு.

பொன்னியின் செல்வன்

கடல்புறா

யவனராணி

குறிஞ்சிமலர்

மணிபல்லவம்

அமரதாரா

காவிரி மைந்தன்

வேங்கையின் மைந்தன்

துப்பறியும் சாம்பு

ருத்ர வீணை 

வெற்றிக்களிறு 

ரங்கராட்டினம் 

சுல்தானா 

நந்தி இரகசியம் 

நீலக்கல் மோதிரம் 

இரகசியமாய் ஒரு இரகசியம் 

சொர்ணரேகை 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

• மொழி வேறு மதம் வேறு. சாதி, மத பாகுபாடு இன்றி, நம் தாய்மொழியே நமக்கு பெருமை என்ற எண்ணம் கொண்டு அனைவரும் தாய்மொழியில் பேச துணியவேண்டும். இதற்கான விதை, இளம் வயதிலேயே விதைக்கப்பட வேண்டும். அறிவிற்காக ஒரு மொழியைப் படிப்பது வேறு, நம் உணர்வுகளை வெளிப்படுத்த நம் மொழியை மதிப்பது வேறு. இதனை உணர்ந்தாலே போதும், மொழி பாதுகாக்கப்படும். 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்  
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-fowzia-iqbal.html 
#நேர்காணல் #கேள்வி #பதில் #பௌசியா_இக்பால் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

8 comments:

  1. அருமையான கலந்துரையாடல்

    ReplyDelete
  2. இவங்கதான் மீனு நாச்சியாரா?! இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்

    பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  3. அமையான பதில்கள்

    ReplyDelete
  4. அமையான பதில்கள்

    ReplyDelete
  5. அருமை சகோதரி...

    ReplyDelete