Saturday, October 20, 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்: 
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோர ஒரு சிற்றூரில் வானம்பார்த்த பூமியை நம்பியிருந்த விவசாயக்குடி இணையரின் மகன். ஏழ்மையிலும் தங்கைகள் இருவர், தம்பிகள் இருவர் என உறவுச்செல்வங்கள் சூழ வளர்ந்த செல்வந்தன். தந்தையும், தம்பியரும் காலத்தின் பசிக்கு இரையாகி / இறையாகி விட்டனர். தற்போது பிழைப்பின் நிமித்தமாக சிங்கப்பூரில் கட்டடக் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

படைப்பு என்பது மொழியாளுமை மிக்க அறிஞர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் விதத்தில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வித்தைக்காட்டி எழுதாமல், எழுத்துக்கூட்டிப் படிக்கும் குறைந்த படிப்பாற்றல் / மொழியறிவுக் கொண்டவர்களும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாடல்களால் இருத்தல் வேண்டும். 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

இரப்பவர்களைப்போல் பெரும்பான்மையான மக்கள் பீருக்கும், பிரியாணிக்கும், இருநூறு ரூபாய்களுக்கும், இலவசத்திற்கும் மயங்கி வாக்களிக்கும் இழிகுணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தொகுதிவாரியாக அறிவார்ந்த தலைமைப்பண்பு உடையவனை ஒதுக்கி விட்டு தன்னுடைய ஜாதிக்காரன் / உறவுக்காரன் என்ற தகுதியின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே நாட்டின் / மக்களின் நலனில் அக்கறை கொண்ட கற்றறிந்த இளம் தலைமுறைத் தலைவர்களை ஜாதி முத்திரைக்குத்தி ஓரங்கட்டி விட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் அடிமைகளையும், ஊழல்வாதிகளையும் அரியணையில் அமர்த்தி அவதியுறும் மதியிழந்த மக்கள் மிகுந்த நாடு எங்கள் தமிழ்நாடு. 




ஒருகாலத்தில் மிகச்சிறந்த பண்புகளை உடையவனாகத் தமக்குத் தோன்றிய ஒரு தலைவன் பின்னொரு நாளில் ஊழல்வாதியாகவும், கொள்ளையனாகவும் மாறும்போது அவனை அரியணையிலிருந்து அகற்றி நடுத்தெருவில் விட்டு உதைத்து, பின்னொரு தகுதியானவனைத் தலைவன் எனத் தேர்ந்தெடுக்கும் திடமும், திறமையும் எம் மக்களுக்கு இதுவரை இல்லை. அம்மாதிரியான நிலைப்பாட்டுக்கு மக்கள் தயாராகாத வரையிலும் ஆளத் தகுதியில்லாத அயோக்கியர்களின் பிடியில் நாட்டு வளமும், மக்களும் சிக்கி நாசமடைவதைத் தடுக்க வழியில்லை. 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

ஒரு குடும்பத்தினுடைய பிள்ளைகள் வளர்ப்பில் தாயின் பங்கு என்னவோ அதற்கு நிகரானது. 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

இறுதி மூச்சு வரையிலும் பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் வாழ்ந்துவிட வேண்டும். அதுபோதும். 

கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 




நம் வரலாறு என்பது வேர்கள். எதிர்காலம் என்பது பூக்களும், கனிகளும். வேர்களைத் தொலைத்துவிட்ட பெருமரத்தில் பூக்களும், கனிகளும் விளையுமா என்ன? வரலாற்றைத் தொலைத்துவிட்ட எந்த இனமும் நிலைத்து நிற்காது. பிள்ளைகளைப் பணம் உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டும் வளர்க்காமல், வரலாற்றையும், இலக்கிய பாரம்பரியத்தையும் கற்றறிபவர்களாகவும் வளர்க்க வேண்டும். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

புத்தகம் என்பது காதலி / காதலன்- கூடுதலான பிரியம் இருக்கும். மின்னனு கருவிகள் மனைவி / கணவன்- கூடுதலான பிரிவுகள் இருக்கும். காலப்போக்கில் நேரும் மாற்றத்தை ஏற்க வேண்டியதுதான் நிலைத்திருப்பதற்கான யுக்தி. 

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

பயன்படுத்தும் விதம்தான் வரமா, சாபமா என்பதைத் தீர்மானிக்கும். 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

திருக்குறள், பகவத் கீதை, காமசூத்ரா, வரலாறு, அறிவியல், மனோதத்துவம், ஆன்மீகம், அடியாள், சிற்றிதழ்கள், வார இதழ்கள், ஃபேஸ்புக் நிலைத்தகவல்கள், வாட்ஸப் பகிர்வுகள் என பாகுபாடின்றி படிக்கும் ஆர்வமுடையவன் நான். இது சிறந்தது, இது இழிவானதென்றும் / இவர் சிறந்தவர், இவர் சுமார் என்றும் தரம் பிரித்து என்னைத் தாழ்த்திக்கொள்வதில் எபக்கு உடன்பாடில்லை. எல்லாவற்றிலும், எல்லாரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கவே செய்கிறது. 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

வாய்ப்பும் திறமையும் அமைந்தால் உலகத்தின் அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உம் தனிச்சிறப்பு. ஆனால் தமிழரிடம் நம் தாய்மொழி தமிழிலேயே பேசுங்கள். அது நம் பிறப்பின் சிறப்பு. 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்  
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-gopal-kannan.html 
#கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

3 comments:

  1. வாழ்க... வாழ்த்துகின்றேன்.

    ///ஏழ்மையிலும் தங்கைகள் இருவர், தம்பிகள் இருவர் என உறவுச்செல்வங்கள் சூழ வளர்ந்த செல்வந்தன்.///

    கண்ணனுக்கே உரிய மொழிநடை.

    ///கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்?

    வாய்ப்பும் திறமையும் அமைந்தால் உலகத்தின் அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உம் தனிச்சிறப்பு. ஆனால் தமிழரிடம் நம் தாய்மொழி தமிழிலேயே பேசுங்கள். அது நம் பிறப்பின் சிறப்பு. ///

    அருமையான பதில் வாழ்க.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கண்ணா... நம் மண்... நமது பெருமை.!

    ReplyDelete