Saturday, October 20, 2018

வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்

வணக்கம்.

‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ சிறுகதைப் போட்டி – 2018ல் பங்கேற்றோரின் பதிவுகள் இந்த இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. போட்டியில் இடம் பெற்ற கதைகளின் இணைப்புகள், தளத்தில் பதியப்பட்ட வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன.

பெண்ணின் நீதி – கோவி. சேகர் 




கள்வன் மகன் – கா. விசயநரசிம்மன் 

ஒக்கல் வாழ்க்கை – கா. விசயநரசிம்மன் 

வருவான் காதல் தேவன் – அபிராமி பாஸ்கரன் 

வடிகால் – ப்ரீத்தி பட்டாபிராமன் 

அறம் இதுதானோ? – அருண்குமார் 

சிறைப் பறவை – அருண்குமார் 

வடக்கிருந்தவர் – சோ. சுப்புராஜ் 

நட்பு – ப்ரீத்தி பட்டாபிராமன் 


களம்புகல் ஓம்புமின் – கா. விசயநரசிம்மன் 

கேட்டதும் காதல் – வி. கங்கா மோகன்



கெடுநரும் உளரோ? – கா. விசயநரசிம்மன் 





பசலைக்கோர் பச்சிலை – இன்னம்பூரான் 


உணர்வுகள் தொடர்கதை – புதுவை பிரபா 

தோள் மேல் சின்ன பனித்துளி – ஸ்டெல்லா மேரி எம். ஜே. 



பயந்து ஓடிய பயம் – மாலா உத்தண்டராமன் 

வாலிழை மகளிர் – மா.மணிகண்டன் 

தேசத்தைக்காத்தல் செய் – மீரா ஜானகிராமன் 

பிரிவு – பானுரேகா பாஸ்கர் 

காதல் – பானுரேகா பாஸ்கர் 

மறப்புகழ் நிறைந்தோன்! – மதிஸ்குமார் 

இதெல்லாம் வீண் செலவு! – மாலா உத்தண்டராமன் 

வள்ளல் – பத்மா 

விடியல் – மாலா உத்தண்டராமன் 


சிறந்த பாடல் எது..? – வெ.கண்ணன் 


வதுமை நன்மணம் – மா. மணிகண்டன் 

காதல் நதியினிலே!!! - பௌசியா 

நன்றி. 

Writer Vetrivel இணையத்தளத்துக்கு நன்றி.

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்

சிகரத்துடன் சில நிமிடங்கள்: 
பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

வடதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோர ஒரு சிற்றூரில் வானம்பார்த்த பூமியை நம்பியிருந்த விவசாயக்குடி இணையரின் மகன். ஏழ்மையிலும் தங்கைகள் இருவர், தம்பிகள் இருவர் என உறவுச்செல்வங்கள் சூழ வளர்ந்த செல்வந்தன். தந்தையும், தம்பியரும் காலத்தின் பசிக்கு இரையாகி / இறையாகி விட்டனர். தற்போது பிழைப்பின் நிமித்தமாக சிங்கப்பூரில் கட்டடக் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

படைப்பு என்பது மொழியாளுமை மிக்க அறிஞர்கள் மட்டும் புரிந்துகொள்ளும் விதத்தில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் வித்தைக்காட்டி எழுதாமல், எழுத்துக்கூட்டிப் படிக்கும் குறைந்த படிப்பாற்றல் / மொழியறிவுக் கொண்டவர்களும் புரிந்துக்கொள்ளும் விதத்தில் எளிமையான சொல்லாடல்களால் இருத்தல் வேண்டும். 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

இரப்பவர்களைப்போல் பெரும்பான்மையான மக்கள் பீருக்கும், பிரியாணிக்கும், இருநூறு ரூபாய்களுக்கும், இலவசத்திற்கும் மயங்கி வாக்களிக்கும் இழிகுணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க தொகுதிவாரியாக அறிவார்ந்த தலைமைப்பண்பு உடையவனை ஒதுக்கி விட்டு தன்னுடைய ஜாதிக்காரன் / உறவுக்காரன் என்ற தகுதியின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். உண்மையிலேயே நாட்டின் / மக்களின் நலனில் அக்கறை கொண்ட கற்றறிந்த இளம் தலைமுறைத் தலைவர்களை ஜாதி முத்திரைக்குத்தி ஓரங்கட்டி விட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் அடிமைகளையும், ஊழல்வாதிகளையும் அரியணையில் அமர்த்தி அவதியுறும் மதியிழந்த மக்கள் மிகுந்த நாடு எங்கள் தமிழ்நாடு. 




ஒருகாலத்தில் மிகச்சிறந்த பண்புகளை உடையவனாகத் தமக்குத் தோன்றிய ஒரு தலைவன் பின்னொரு நாளில் ஊழல்வாதியாகவும், கொள்ளையனாகவும் மாறும்போது அவனை அரியணையிலிருந்து அகற்றி நடுத்தெருவில் விட்டு உதைத்து, பின்னொரு தகுதியானவனைத் தலைவன் எனத் தேர்ந்தெடுக்கும் திடமும், திறமையும் எம் மக்களுக்கு இதுவரை இல்லை. அம்மாதிரியான நிலைப்பாட்டுக்கு மக்கள் தயாராகாத வரையிலும் ஆளத் தகுதியில்லாத அயோக்கியர்களின் பிடியில் நாட்டு வளமும், மக்களும் சிக்கி நாசமடைவதைத் தடுக்க வழியில்லை. 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

ஒரு குடும்பத்தினுடைய பிள்ளைகள் வளர்ப்பில் தாயின் பங்கு என்னவோ அதற்கு நிகரானது. 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

இறுதி மூச்சு வரையிலும் பிற உயிர்களுக்குத் தீங்கிழைக்காமல் வாழ்ந்துவிட வேண்டும். அதுபோதும். 

கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 




நம் வரலாறு என்பது வேர்கள். எதிர்காலம் என்பது பூக்களும், கனிகளும். வேர்களைத் தொலைத்துவிட்ட பெருமரத்தில் பூக்களும், கனிகளும் விளையுமா என்ன? வரலாற்றைத் தொலைத்துவிட்ட எந்த இனமும் நிலைத்து நிற்காது. பிள்ளைகளைப் பணம் உற்பத்தி செய்யும் இயந்திரமாக மட்டும் வளர்க்காமல், வரலாற்றையும், இலக்கிய பாரம்பரியத்தையும் கற்றறிபவர்களாகவும் வளர்க்க வேண்டும். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

புத்தகம் என்பது காதலி / காதலன்- கூடுதலான பிரியம் இருக்கும். மின்னனு கருவிகள் மனைவி / கணவன்- கூடுதலான பிரிவுகள் இருக்கும். காலப்போக்கில் நேரும் மாற்றத்தை ஏற்க வேண்டியதுதான் நிலைத்திருப்பதற்கான யுக்தி. 

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

பயன்படுத்தும் விதம்தான் வரமா, சாபமா என்பதைத் தீர்மானிக்கும். 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

திருக்குறள், பகவத் கீதை, காமசூத்ரா, வரலாறு, அறிவியல், மனோதத்துவம், ஆன்மீகம், அடியாள், சிற்றிதழ்கள், வார இதழ்கள், ஃபேஸ்புக் நிலைத்தகவல்கள், வாட்ஸப் பகிர்வுகள் என பாகுபாடின்றி படிக்கும் ஆர்வமுடையவன் நான். இது சிறந்தது, இது இழிவானதென்றும் / இவர் சிறந்தவர், இவர் சுமார் என்றும் தரம் பிரித்து என்னைத் தாழ்த்திக்கொள்வதில் எபக்கு உடன்பாடில்லை. எல்லாவற்றிலும், எல்லாரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கவே செய்கிறது. 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

வாய்ப்பும் திறமையும் அமைந்தால் உலகத்தின் அத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள். அது உம் தனிச்சிறப்பு. ஆனால் தமிழரிடம் நம் தாய்மொழி தமிழிலேயே பேசுங்கள். அது நம் பிறப்பின் சிறப்பு. 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : கோபால் கண்ணன்  
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-gopal-kannan.html 
#கோபால்_கண்ணன் #நேர்காணல் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #கேள்வி #பதில் #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

Monday, October 15, 2018

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்

சிகரத்துடன் சில நிமிடங்கள்

பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! 

கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்? 

• நான், தமிழ்மொழியை விரும்புபவள் என்ற கர்வம் மிகக்கொண்டவள். விரும்பியதை அணுஅணுவாய் இரசிக்கும் தன்மை கொண்டவள். 

கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? 

• நல்ல படைப்பு? படைப்புகள் அனைத்தும் படைப்பாளியின் பார்வையில் நல்ல படைப்புகளே. ஆனால், படைப்பின் பின்னணியில் படைப்பாளி தெரியாமல், முன்நிற்கும் படைப்புகளே சிறந்த படைப்புகள் ஆகின்றன. 

கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? 

• அடிமட்ட அரசியல் ஞானம் கூட இல்லை என்பதே என் கருத்து. திரைப்படங்களில் வருவது போல, மக்கள் நாயகனாய் யாரேனும் வரமாட்டார்களா என்பது போல ஓர் மாற்றத்தை நம் மக்கள் எதிர்பார்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு, காலம்காலமாய் எதிர்பார்ப்பாக மட்டுமே உள்ளது என்பது மறுக்கமுடியா உண்மை. என்று மாறும் இந்நிலை என அனைவருமே கேட்கிறோம். மாற்றத்தை நம்மிடமிருந்து தரவேண்டும் என முன்னேற முடிவதில்லை. முன்னேறினாலும் பூஞ்சை பிடித்த இன்றைய அரசியல் மற்றவரையும் மொய்த்துக்கொள்கிறது என்பதே நிதர்சனம். 

கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? 

* பிறந்த பிள்ளைக்கு தாய்ப்பாலின் பங்கு எத்தகையதோ, அத்தகையதே ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு. 

கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? 

• பிறந்து, வாழ்ந்து, இறக்கும் பல இலட்சம் மக்களுள் நானும் ஒருவள் என்று இருப்பதை வெறுப்பவள். என் பேர் சொல்ல எதையேனும் விட்டுச்செல்ல வேண்டும். நான் விட்டுச்செல்லும் அந்த ஏதோ ஒன்று, ஒரு சமூகத்தை சிந்திக்க தூண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். அந்த ஏதோ ஒன்றே என் வாழ்வின் இலட்சியம்!! அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 




கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? 

• நான் நிற்கும் இந்த சமூகம், என்னை வளர்த்த இந்த மண் என்னைப்போல் பலரையும் கண்டுள்ளது. கோடிக்கணக்கானோர் வாழ்ந்த என் மண்ணின் வரலாறு எனக்கு முக்கியம். என் மூதாதையர் இல்லையேல் இன்று எனக்கு மொழி இல்லை. அவர்கள் இல்லையேல் இன்று எனக்கு நவீனம் இல்லை. அதிபுத்திசாலிகளான என் முன்னோர்களை பற்றி தெரிந்து கொண்டால் மட்டும்தான், நான் எந்த நிலையில் இருக்கிறேன், என் நிலைப்பாடு என்ன என்பது தெரியவரும். வரலாறு இல்லாமல் எதிர்காலப் பயணம், சாவியை எடுக்காமல் வீட்டை திறப்பதற்கு சமம். 

கேள்வி 07 : உலகம் முழுவதும் கணினி மயமாகிவரும் சூழலில் புத்தக வாசிப்பு அழிந்து விடுமா? 

• நூறுகோடி மக்களில் அடிமட்டத்தில், ஒரு சிறந்த வாசகன் இருக்கும்பட்சத்தில் புத்தக வாசிப்பு அழிய வாய்ப்பே இல்லை. கண்களுக்கு முன் விரியும் கணினித்திரை, புத்தகத்தின் மணமும், தாள்களை தொட்டு திருப்பும் உணர்வையும் தருவதில்லை. கணினியின் அசுர வளர்ச்சி, புத்தக வாசிப்பை எவ்வகையிலும் தடைசெய்ய இயலாது.  

கேள்வி 08 : பேஸ்புக், வாட்ஸப் போன்ற சமூக வலைத்தளங்கள் வரமா, சாபமா? 

• சமூக வலைத்தளங்கள் நாம் நம்மை பாதுகாத்துகொள்ளும் வரை, நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்களைப் பொறுத்து, நாம் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் தகவல்களைப் பொறுத்து பலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் அமைகிறது. எளிதில் புரியும்படி கூறவேண்டும் என்றால், அறிவியல் தொழில்நுட்பசாதனங்கள் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்து நமக்கு பயனுள்ளதாகவும், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியும்வகையில் அமைகிறது அல்லவா? இதுவும் அவ்வாறே. கையாள தெரியவேண்டும். 

கேள்வி 09 : உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், புத்தகங்கள்? 

• சங்க புலவர்கள் அனைவரும் குறிப்பாக திருவள்ளுவர். பாரதி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன், இந்திரா சௌந்தரராஜன், சுபா, ரமணி சந்திரன், சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, அபிராமி பாஸ்கரன், அனுஷா வெங்கடேஷ். 

புத்தகங்கள்: என்றும் நான் என்னுடனே வைத்திருப்பது திருக்குறள். மனம் சலனப்படும் போது பாரதியார் கவிதைகள். பொழுதுபோக்க எட்டுத்தொகை. சங்ககால வாழ்வியலை அறிந்துகொள்ள பத்துப்பாட்டு. திருப்பாவை, தேவாரம் இறைபக்திக்கு.

பொன்னியின் செல்வன்

கடல்புறா

யவனராணி

குறிஞ்சிமலர்

மணிபல்லவம்

அமரதாரா

காவிரி மைந்தன்

வேங்கையின் மைந்தன்

துப்பறியும் சாம்பு

ருத்ர வீணை 

வெற்றிக்களிறு 

ரங்கராட்டினம் 

சுல்தானா 

நந்தி இரகசியம் 

நீலக்கல் மோதிரம் 

இரகசியமாய் ஒரு இரகசியம் 

சொர்ணரேகை 

கேள்வி 10 : நாம் நமது மொழியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் என்ன செய்ய வேண்டும்? 

• மொழி வேறு மதம் வேறு. சாதி, மத பாகுபாடு இன்றி, நம் தாய்மொழியே நமக்கு பெருமை என்ற எண்ணம் கொண்டு அனைவரும் தாய்மொழியில் பேச துணியவேண்டும். இதற்கான விதை, இளம் வயதிலேயே விதைக்கப்பட வேண்டும். அறிவிற்காக ஒரு மொழியைப் படிப்பது வேறு, நம் உணர்வுகளை வெளிப்படுத்த நம் மொழியை மதிப்பது வேறு. இதனை உணர்ந்தாலே போதும், மொழி பாதுகாக்கப்படும். 

சிகரத்துடன் சில நிமிடங்கள் : பௌசியா இக்பால்  
https://manaththooralgal.blogspot.com/2018/10/few-minutes-with-sigaram-fowzia-iqbal.html 
#நேர்காணல் #கேள்வி #பதில் #பௌசியா_இக்பால் #உரையாடல் #வாசிப்பு #தமிழ் #வலைத்தளம் #எழுத்து #சிகரத்துடன்_சில_நிமிடங்கள் #சிகரம் 

Friday, August 31, 2018

புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி

மூவேந்தர்களும் ஒற்றுமையின்மையினாலும் தாமே ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்டும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்தது வரலாறு. மூவேந்தர் பற்றிய சங்கப்பாடல்கள் ஏராளம். ஆனால் மூவரையும் இணைத்துப் பாடிய பாடல் (மூவரும் சேர்ந்து இடம்பெற்ற பாடல்) ஒட்டுமொத்த சங்க இலக்கியத்திலேயே ஒன்றே ஒன்று தான்.

சோழன் ராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி நடத்திய வேள்வியில் பங்கேற்க சேரமான் மாரிவெண்கோ மற்றும் பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப்பெருவழுதி இருவரும் வந்திருந்த போது நமது ஔவை பெருமாட்டி பாடிய அந்தச் சிறப்புமிக்க பாடல் இதோ: 



நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா;
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது,
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்;
யான் அறி அளவையோ இவ்வே; வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்,
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக, நும் நாளே!

பாடியவர்: ஔவையார். 
சிறப்பு: சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தாரைப் பாடியது. 

திணை: பாடாண். 
துறை: வாழ்த்தியல். 


புறநானூற்று சிறப்புத் தகவல்கள் | இலக்கியம் | சிவரஞ்சனி  
http://thooralgal.sigaram.info/2018/08/Puranaanooru-Moovendhar-Poem.html  
#சங்ககாலம் #இலக்கியம் #தமிழ் #மொழி #மூவேந்தர் #புலவர் #கவிதை #ஔவையார் #சேரன் #சோழன் #பாண்டியன் #மரபுக்கவிதை #சிகரம்