Saturday, October 8, 2016

நாகேஷ் 25


மானா பாஸ்கரன்
நாகேஷ்... மாறும் உடல் மொழி... ஏறி இறங்கும் குரல் ஜாலம்... தமிழர்களின் 40 ஆண்டு கால சாயங்காலச் சந்தோஷம். ஈர்க்குச்சி உடம்பால், சிரிப்புத் தீக்குச்சி கிழித்தவர்!
பூர்வீகம் மைசூர். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான தந்தை ஊர் ஊராகப் பணியாற்ற, குடும்பம் மட்டும் தமிழ்நாட்டில் தாராபுரத்தில் இருந்தது. தாராபுரம் பீமராய அக்ரஹாரம்தான் நாகேஷ் வளர்ந்த தொட்டில்!

பெற்றோர் கிருஷ்ணராவ் - ருக்மணி வைத்த பெயர் நாகேஸ்வரன். பின்னாளில் நாகேஷ் ஆனது. வீட்டுச் செல்லப் பெயர் - குண்டப்பா!

பள்ளி நாடகத்தில் நாகேஷ்க்கு எமன் வேஷம். வசனம் பேசிக்கொண்டே பாசக் கயிற்றினை வீச வேண்டும். இவர் வீசிய பாசக் கயிறு எசகுபிசகாக ஒருவர் கழுத்தில் போய் விழுந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரின் கழுத்து அது!

இளம் வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு ஹைதராபாத்துக்கு வந்தவர். ரேடியோ கடை, ஊறுகாய் கம்பெனி எடுபிடி, மில்லில் கூலி வேலை என்று பல வேலைகள் பார்த்திருக்கிறார்!

முதன்முதலில் நாடகத்தில் வயிற்று வலி நோயாளியாக நடித்தார். அன்று அவரது நடிப்பைப் பாராட்டி, முதல் பரிசை வழங்கியவர் எம்.ஜி.ஆர்!

கோயம்புத்தூரில் பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜில் படித்தபோது, அடுத்தடுத்து மூன்று தடவை அம்மை போட்டது. முகம் முழுக்க அம்மைத் தழும்புகளை வைத்துக்கொண்டு பலரது முகத்தை மலரவைத்தது அவரது நடிப்பின் வெளிச்சம்!

ஹோட்டலில் தங்கியிருந்த நாகேஷை அவரது நாடக நடிப்பின் மீது கொண்ட காதலால்... தன் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தந்தவர் நடிகர் பாலாஜி!

இவர் மனைவி பெயர் ரெஜினா. ஆனந்த் பாபு, ரமேஷ் பாபு, ராஜேஷ் பாபு என்று மூன்று மகன்கள். மூன்று மகன்களும் வெவ்வேறு மதங்களில் திருமணம் செய்துகொண்டபோது மனமார ஆசி வழங்கியவர்!

முதல் படம் 'தாமரைக்குளம்' ஷூட்டிங்கின்போது, சரியாக நடிக்கவில்லை என்று உதவி இயக்குநர்கள் நாகேஷைக் கடிந்தனர். உடன் நடிக்க வந்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்ததைச் சொன்னார் இவர். 'மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி' என்றாராம் ராதா!

'அபூர்வ ராகங்கள்' படத்தில் கண்ணதாசனுக்கு வைத்தியம் பார்க்க டாக்டராக வருவார் நாகேஷ். கண்ணதாசனிடம் ஒரு கவிதை சொல்லச் சொல்வார் இவர். கவிதை சொன்ன கண்ணதாசனிடம் பீஸ் கேட்பார் இவர். 'இதுதான்யா ஃபீஸ்' என்பார் அவர்!

முறைப்படி யாரிடமும் நடனம் கற்றுக்கொண்டது இல்லை. யாரையும் காப்பி அடித்ததும் இல்லை. ஆனால், நடனத்தில் 'நாகேஷ் பாணி' என்கிற தனி முத்திரையைக் கொண்டுவந்தார்!

எம்.ஜி.ஆருடன் 45 படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் இவர்தான். அதில், 19 படங்களில் இவருக்கு ஜோடி மனோரமா!

'திருவிளையாடல்' படத்தின் காட்சிகளை ரஷ் பார்த்த சிவாஜி, 'நாகேஷின் நடிப்பு பிரமாதம். தயவுசெய்து எதையும் கட் பண்ணிடாதீங்க' என்று டைரக்டர் ஏ.பி.நாகராஜனிடம் கேட்டுக்கொண்டாராம்!

நகைச்சுவையில் மட்டுமல்ல; 'நீர்க் குமிழி' குணச்சித்திரம், 'சர்வர் சுந்தரம்' ஹீரோ, 'அபூர்வ சகோதரர்கள்'ல் வில்லன், 'மகளிர் மட்டும்' பிணம் என்று வெளுத்துக்கட்டியவர்!

'அபூர்வ ராகங்கள்' ஷூட்டிங். பாலசந்தர் ஆக்ஷன் சொல்லிவிட்டார். நாகேஷ், கோப்பையைக் கையில் எடுத்து சுவரில் தெரிந்த தன் நிழலைப் பார்த்து, 'சியர்ஸ்' என்று சொல்ல... படம் பார்த்தவர்கள் பாராட்டினார்கள். நாகேஷின் டைமிங் சென்ஸ்க்கு  இது ஒரு சாம்பிள்!

இவரை எப்போதும் 'டேய் ராவுஜி' என்று செல்லமாக அழைப்பார் பாலசந்தர்!
டைரக்ஷன் துறையையும் விட்டுவைக்கவில்லை இவர். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' இவரது டைரக்ஷனில் வெளிவந்த திரைப்படம்!

பணம் விஷயத்தில் நாகேஷ் கறார் பேர்வழி என்று சினிமா உலகில் ஒரு பேச்சு உண்டு. ஆனால், 'எவ்வளவு பணம் இருந்தாலும் சாப்பிட ஒரு வயிறு தானே' என்று சொன்ன எளிமையான கலைஞன் என்பதுதான் நிஜம்!

'சீட்டாட்டம், டேபிள் டென்னிஸ், தத்துவம், நடனம், நடிப்பு என்று எதைச் செய்தாலும் உச்சம் தொட்ட மகா கலைஞன்' என்று இவரைப் புகழ்ந்தவர் கவிஞர் வாலி!

'நாகேஷ் என் வாழ்வில் நட்சத் திரமாக, மூத்த அண்ணனாக, அறிவுரை சொல்லும் நண்பனாக, அறிவுரை கேட்கும் அப்பாவியாக, சொல்லிக்கொடுத்த ஆசானாக, சொல் பேச்சுக் கேட்கும் மாணவனாகப் பல பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்' என்று சொன்னவர் கமல்ஹாசன்!

'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், 'கோழி இன்னும் சாகலையாப்பா?'

'தசாவதாரம்' கடைசி நாள் ஷூட்டிங் குக்கு வந்து நடித்துக் கொடுத்தவர் கடைசியாகச் சொன்ன வாக்கியம், 'என் கடைசிப் படம் நல்ல படம். I am honoured-டா கமல்!'

தாம் வாங்கிய பரிசுகள், ஷீல்டுகள் எதையும் வீட்டு ஷோகேஸில் வைக்கும் பழக்கம் இல்லாதவர்!

இந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் பிறந்தது - செப்டம்பர் 27, 1933-ல். மறைந்தது ஜனவரி 31, 2009-ல்!

30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழர்களைச் சிரிக்கவைத்த இந்தக் கலைஞனை இந்திய அரசின் எந்த விருதுகளும் கௌரவிக்கவில்லை!

நன்றி: விகடன்.

Friday, September 12, 2014

கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் சிறப்பு பகிர்வு

சுப்பையா என்று இளம் வயதில் அழைக்கப்பட்ட தமிழ் கவிதையுலகின் சூரியன் பாரதி நினைவு நாள் [ செப் - 11]

தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன். மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன். அழகிய தமிழ் மகன் இவன்!. இளம் வயதில் அம்மாவின் பாசம் என்னவென்று தெரியாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்ந்த அவருக்கு அப்பொழுது கணக்கு என்றால் பிணக்கு. இது வெகு காலத்துக்கு கல்விமுறையின் மீது வெறுப்பாகவே மாறியது. ஒரு சிறுவன் இளமையில் கல் என்று ஓயாமல் மனனம் செய்து சொல்லிக்கொண்டு இருந்த பொழுது ‘முதுமையில் மண்’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் இவர்.

அற்புதமான கவிதையாற்றல் பாரதி எனும் கலைவாணியை குறிக்கும் பட்டத்தை தந்தது. பாரதி சின்னப்பயல் என்று கவிதை பாட சொல்ல பார் அதி சின்னப்பயல் என எள்ளல் குறையாமல் பாடியது பாரதி தான்
தமிழ் எழுத்துலகில் கார்ட்டூன் என்பதை அறிமுகப்படுத்தியது பாரதியாரே. அதை முழுதாக சித்திர பாரதி என்கிற நூலில் பார்க்கலாம். இளம் வயதில் பாரதிக்கு ஒரு காதல் இருந்தது. அந்த பெண்ணை சாகுந்தலை என்று அடையாளமிட்டு குறிக்கிறார். தன் மகளுக்கு அதே பெயரை வைத்தார் அவர்.

மதுரை தமிழ் சங்கம் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது அவரின் கவிதை. அந்தக்கவிதை தான் ,’செந்தமிழ் நாடெனும் போதினிலே’. பண்டிதர்கள் கடத்திக்கொண்டு போன பைந்தமிழ் குழந்தையை கண்டுபிடித்துக்கொடுத்த காவல் நிலையமான பாரதியின் எளிய நடை அக்காலத்தில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதை பண்டிதர்கள் எதிர்த்தார்கள். பாரதி ,”கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது !” என்று மட்டும் சொன்னார்.

எக்கச்சக்க வறுமையிலும் குருவிக்கு தானியங்களை கொடுத்துவிட்டு சிரித்த நேசிப்பாளன். வாட்டிய பசியிலும் ,”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா !” என்று பாடிய பெருங்கவிஞன் அவன். எல்லா உயிரிலும் இறைவன் இருக்கிறான் என்று நம்பிய அவர் புதுச்சேரியில் புயலில் பறவைகள் இறந்த பொழுது கனிவோடு அவற்றை அடக்கம் செய்தார்.

நாட்டை தட்டி எழுப்ப கவிதை எழுதிய அந்த சிந்துக்கு தந்தை எப்பொழுதும் தாலாட்டு மட்டும் பாடியதே இல்லை. நாடு உறங்க இது தருணமன்று என்கிற எண்ணமே காரணம். பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்ற வைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு துன்புறுகிறார்கள் என்பதை உணர்ந்து `பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்று தான் எழுதினார் பாரதி. கழுதை குட்டியை தூக்கி போட்டுகொண்டு மனைவியோடு கம்பீரமாக நடந்த பாரதியை ,”பைத்தியங்கள் உலவப்போகின்றன !” என்று ஊரார் சொன்ன பொழுது எழுப்பியது தான் ‘நிமிர்ந்த நன்னடை’ பாடல்


. 'என் பெண் தாழ்ந்த சாதிப் பையனுடன் ரங்கூனுக்கு ஓட வேண்டும். அவரைத்தான் திருமணம் செய்யப்போவதாக எழுத வேண்டும். நான் ஆனந்தப்பட வேண்டும்' என்று சொன்னவர்!என்று கடிதம் எழுதவேண்டும். அதைக்கேட்டு நான் பூரிக்க வேண்டும் ‘ என்று பாரதி எழுதினார்.

‘கடமை அறியோம் தொழில் அறியோம் !” என்று பறவையின் மனப்பான்மையிலும்,’தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா’ என்றும் பாரதியால் தான் பாட முடியும்
வறுமையில் வாடிப்போன அவர் “பராசக்தி! இந்த உலகின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன்மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?
கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லையே. குழந்தைக்கு ஜுரம் வந்தது… வைத்தியனுக்குக் கொடுக்கப் பணம் இல்லை. குழப்பம், குழப்பம்; தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்! தாயே! என்னைக் கடன்காரர் ஓயாமல் தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும் உப்புக்கும் யோசனை செய்து கொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்?” என்று புலம்பினார்
 
பாரதி காந்திக்கு கடிதம் வரைகிற பொழுது அவர் சென்னையில் ஆங்கிலத்தில் பேசியதை விடுத்து ஏதேனும் இந்திய மொழியில் பேசி இருக்கலாமே என்று கேட்ட பொழுது அவர் அவ்வாறே செய்கிறேன் என்றார். ஆனால்,கடிதத்தை ஏன் ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்று கேட்ட பொழுது ,’பிறரை புண்படுத்தும் பொழுது அன்னை மொழியை பயன்படுத்தி பழக்கமில்லை.’ என்று தெறித்து வந்தது பதில் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் பாரதி உறங்கிக்கொண்டு இருக்கிறான். அவனின் கீதங்கள் அக்கினி குஞ்சுகளை ஈந்துக்கொண்டே இருக்கின்றன. வேடிக்கை மனிதரைப்போல வீழாத அந்த என்றும் இளைஞன் இறக்கிற பொழுதும் வெள்ளையனை தலை முடியில் கூட அண்ட விடமால் நல்லதொரு வீணையாக நாட்டை மீட்டி மறைந்தான். அவனின் இறுதி அஞ்சலிக்கு வந்தது இருபதுக்கும் குறைவானோர்.

- பூ.கொ.சரவணன் 

நன்றி : ஆனந்த விகடன் 

2014.09.11

Monday, August 18, 2014

திண்டுக்கல் ஐ.லியோனியின் நேர்முகம்!      னது நாவன்மையால் பட்டிமன்ற மாமன்னராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறவர் திண்டுக்கல் லியோனி.

அவர் வாய் திறந்தால், கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் கல்லறைக் குப்போன முதியவர்களும்கூட வாய்விட்டுச் சிரிப்பார்கள். அத்தகைய நகைச்சுவை ஆற்றல்கொண்ட லியோனி கடல் கடந்தும் தமிழ் முழக்கம் செய்து வருகிறார்.  "இனிய உதய'த்துக்காக அவரை நாம் கேள்விகளோடு சந்தித்தபோது...

இன்று மிகப் பிரபல மான பேச்சாளராகப் புகழ்பெற்றிருக்கிறீர்கள். உங்கள் பேச்சாற்றலுக்கு முன்மாதிரி யார் ?

என் பேச்சாற்றலுக்கு முன்மாதிரியாக இருந்தவர், எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த என் தமிழாசிரியர், பெரும்புலவர் ஆர். ராகசாமி அவர்கள்தான். தற்போது அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப் பள்ளியில்  வசித்துவருகிறார். அவர் போட்டுக்கொடுத்த தடத்தில்தான் என் பயணம் உற்சாகமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உங்கள் இளமைக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

நான் திண்டுக்கல் ஆரோக்கிய மாதா கோவில் தெருவில் இருக்கும் புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். தற்போது அது புனித பால் உயர்நிலைப் பள்ளியாய் உருமாறி உயர்ந்து நிற்கிறது.  நான் பெரிய குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு ஆறு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். மிகமிக வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தேன். அதேசமயம் என் உறவினர்கள் பலர் இசை, நாடகம், நகைச்சுவை போன்றவற்றில் ஆர்வம் கொண்ட வர்களாக இருந்தார்கள். எனவே இசையும் நகைச்சுவையும் என் இளமைப் பருவத்திலேயே என்னுடன் ஒட்டிக்கொண்டன. அவை நான் பெற்ற வாழ்வின் கொடைகள்.

பொதுவாக, பேசிப்பேசியே பொழுதைக் கழிக்காதே வீணாகிவிடுவாய் என்று அறிவுரை சொல் லுவார்கள். ஆனால் இந்த அறிவுரை உங்கள் விசயத் தில் பொய்த் துப் போய்விட்டதே. எப்படி?

இதுவும் எனக்குக் கிடைத்த இயற்கை யின் கொடைதான். பொதுவாக பேசிப்பேசியே வீணாகக் கழிக்கும் பேச்சு, பிரச்சினைகளைத்தான் உண்டாக்கும். நேரத்தையும்  அது விரயமாக்கும். ஆனால் நான் மேடையில் பேசும் பேச்சு, மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. என் பேச்சைக் கேட்பவர்கள் இன்னும் பேசுங்கள் என்று கேட்பதும் கட்டணம் கொடுத்து என்னைப் பேச அழைப்பதும்தான் இதுவரை நான் கண்டது. மனிதன், மற்றவர்களிடம் தனது கருத்தைப் பரிமாறிக்கொள்ளக் கிடைத்த ஓசை வடிவம்தான் பேச்சு. சிந்தனையாளர்களின் பேச்சு வரலாற்றில் பல அரிய நல்ல காரியங்களை ஏற்படுத்தி யிருக்கிறது. அறிஞர் அண்ணாவைப் போன்ற தலைவர்களின் பேச்சு, அரசியலில் மிகப்பெரிய புரட்சியையே உண்டாக்கியிருக்கிறது. தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்தச் சிந்தனையாளர்களின் பேச்சு, நம்பமுடியாத அளவிற்கு சமுதாய மறுமலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

எனவே பேச்சுக்கலை என்பது பொழுதைப் போக்கக் கூடிய விசயம் அல்ல; பொழுதை ஆக்கக்கூடிய விசயம். எனது பேச்சாற்றலும் அப்படிப்பட்ட புரட்சியை உண்டாக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.

பள்ளிப் பருவத்தில் நீங்கள் பேசி, பரிசு பெற்றதுண்டா?

புனித சின்னப்பர் நடுநிலைப் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, பேச்சுப் போட்டியில் மூன்றாம் பரிசாக ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பா வைப் பெற்றேன். அது மற்றவர்களுக்கு வேண்டு மென்றால் வெறும் பிளாஸ்டிக் டப்பா. என்னைப் பொறுத்தவரை நான் முதன்முதலில் வாங்கிய கோல்ட் மெடல். அதுதான் இன்றுவரை எனக்குள் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

உங்கள் முதல்மேடை அனுபவம்?

நான் முதன்முதலாகப் பட்டிமன்றம் பேசியது திண்டுக்கல் மேட்டுப்பட்டி பங்கு சர்ச் விழாவில் தான். அப்போது நடுவராக இருந்தவர் மரியாதைக்குரிய பட்டிமன்ற ஜாம்பவான் அய்யா பேராசிரியர் சாலமன் பாப்பையா. ஏசுநாதர் செய்தது சமயப் புரட்சியா? சமுதாயப் புரட்சியா? என்ற தலைப்பில்  நடந்த அந்த பட்டி மன்றத்தில் நான், சமயப் புரட்சி என்ற தலைப்பில் பேசினேன். ஆனால் அன்றைய பேச்சு எனக்கே பிடிக்கவில்லை. காரணம் அது சரியாய் சோபிக்கவில்லை. "ஆஹா! வேலைக்கா காது போலிருக்கே' என்று மனம் நொந்துபோனேன். அப்போது அந்த ஆலயத்தின் பங்குத் தந்தைதான், ""கவலைப்படாதே, நீ நன்றாகப் பேசினாய். உன்னிடம் விசயம் இருக்கிறது'' என்று என்னை உற்சாகப்படுத் தினார். அந்த உற்சாகம்தான், அந்த முதல் மேடையில் தோற்ற என்னை, இன்று வெற்றியாளனாக ஆக்கியிருக் கிறது.

உங்கள் பேச்சாற்றலுக்குக் கிடைத்த  மிகப் பெரிய பாராட்டாக எதைக் கருதுகிறீர்கள்?

தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் இலக்கியவாதியும், தேர்ந்த எழுத்தாளர், பேச்சாளர், அரசியல் தலைவர் என்ற மகுடங்களோடு கம்பீரமாக வாழ்ந்து கொண்டிருப்பவரும் முத்தமிழறிஞருமான டாக்டர் கலைஞரிடம், நான் பெற்ற பாராட்டுகளையே மிகப்பெரிய பாராட்டுகளாகக் கருதுகிறேன். எனது பட்டிமன்றப் பேச்சை முழுதாய் உட்கார்ந்து கேட்டு ரசித்து, அகம் மகிழ்ந்து என் நெற்றியிலே முத்தமிட்டு வாழ்த்தினாரே, அதைவிட வேறு என்ன  பாராட்டு எனக்கு வேண்டும்? நான் பெற்ற முத்தங்களிலேயே மறக்க முடியாத முத்தப் பரிசு அவரது  முத்தப் பரிசுதான். அதுமட்டுமல்லாது 2011-ல் என்னைப் பாராட்டி கலைமாமணி விருதை தனது கரங்களால் எனக்கு வழங்கி சிறப்பித்தி ருக்கிறார் கலைஞர்.

உங்களால் மறக்கமுடியாத மேடை அனுபவம்?

 பட்டிமன்றங்களுக்கு வருவதற்குமுன் 85-களில் ஆசிரியர் போராட்ட மேடைகளில் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தேன். அப்போது திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் நான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடிய "கையில வாங்கினேன் பையில போடலை, காசு போன இடம் தெரியலை' என்ற பாடலைப் பாடி அதற்கு விளக்கமும் சொன்னேன். அப்போது தள்ளுவண்டி வைத்துப் பிழைக்கும் ஒரு வயதான பெரியவர், என்னிடம் வந்து, தன் வேட்டி முடிப்பில் இருந்து மூன்று ரூபாய்க்கான நாணயங்களை எடுத்து என்னிடம் கொடுத்து, "நீ நல்லா பேசுறே, பெரிய ஆளா வருவே' என்று வாழ்த்தி, வியர்வை வடிந்து கொண்டிருந்த தனது முகத்தை என் கைகளில் பதித்து, ஒரு முத்தம் கொடுத்தார். எனக்குக் கிடைத்த மக்களின் மாபெரும் அங்கீகாரமாக இதைத்தான் இப்போதும் நினைக்கிறேன்.

உங்கள் திருமணம் காதல் திருமணமா?

ஆமாம். காதல் திருமணம்தான்.

நீங்கள் கேட்டு வியந்த பேச்சு யாருடைய பேச்சு?

முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டு நான் வியந்திருக்கிறேன். தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தபோது, நிருபர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேட்டனர். அப்போது கலைஞர், "ஒரு தாய் தனது குழந்தையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சுகிறபோது அது முகத்திலே சிறுநீர் கழித்துவிட்டால், அந்தக் குழந்தையை தாய் வெறுப்பாளா? மாட்டாள். தன் முகத்தை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் குழந்தையைக் கொஞ்ச ஆரம்பிப்பாள். அந்தத் தாயைப் போலத்தான்  நானும்' என்றார். இப்படிப் பட்ட  கலைஞரின் சமயோஜிதப் பேச்சாற்றல் பலரை யும் வியக்க வைத்திருக்கிறது.

நீங்கள்  படித்த ஆசிரியர்கள் உங்களைப் பார்க்கும்போது என்ன சொல்வார்கள்?

எனது ஆசிரியர்களை நான் சந்திக்க நேரும் போதெல்லாம் அவர்கள், "வகுப்பில் நாங்கள் பார்த்த உனக்கும் இப்போது இருக்கும் உனக்கும் சம்பந்தமே இல்லையே' என்று வியப்பார்கள். நான் படித்த காலத்தில் செய்த சேட்டைகளால் பெற்ற தண்டனைகள் அதிகம். அவர்களது அடிகளால் ஏற்பட்ட வடுக்களை நான் அவர்களிடம் காட்டியிருக்கிறேன்.

அப்போது அவர்கள் ஒருவித கூச்சத்தோடு, இப்போதைய எனது நிலைக்கு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்கள் பாருங்கள். அந்த ஆனந்தத்திற்கு ஈடு இணையே இல்லை.

உங்கள் பலம் எது? பலவீனம் எது?

எந்தத் தலைப்பு கிடைத்தாலும் அதைப் பற்றிப் பேசமுடியும்- மக்களைக் கவரமுடியும் என்று நினைப்பது எனது பலம். அளவுக்கு அதிகமாக எளிமையாக இருப்பதும், பிறர் சொல்வதை உடனே நம்புவதும் எனது பலவீனம்.

எல்லாரையும் சிரிக்க வைக்கும் உங்களைக் கலங்க வைத்த  சம்பவம் எது?

எனது தந்தையார் பெயர் இன்னாசி. உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். என்மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தவர். எனக்கும் அப்பாமீது அளவு கடந்த பிரியம். அவரோடு 24-8-98 இரவில் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடன் மேலும் பேசிக்கொண்டிருக்க அப்பா ஆசைப்பட்டார்.

ஆனால் நானோ, அப்பா தூங்கட்டுமே என்று விரைவாக விடைபெற்று வீட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த அரைமணி நேரத்தில் அவரது இறப்புச் செய்தி வந்து என்னை நிலைகுலைய வைத்தது. அவர் கடைசியாக விரும்பியதுபோல் இன்னும் கொஞ்சம் நான் பேசிக்கொண்டிருந்தால் அந்த மகிழ்ச்சியில் மேலும் சிலகாலம் அவர் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. என் அப்பாவின் மறைவுதான் என்னை ரொம்பவே கலங்க வைத்துவிட்டது.

அரசியல் மேடைகளிலும் தைரியமாக ஏறுகிறீர்களே எப்படி?

 நான் தற்போது திராவிட முன்னேற்றக் கழக மேடைகளில் ஏறிப் பேசிவருகிறேன். ஜாதி, மதம்... இந்த இரண்டும்  இல்லாமல் ஒரு மனிதனால் வாழ்ந்துவிட முடியும். ஆனால் மொழி இல்லாமல் எந்த மனித இனத்தாலும் வாழமுடியாது. நம் தாய்மொழியான தமிழைப் பாதுகாக்கவும் மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும் ஜாதிக் கட்டமைப்பு களைத் தகர்த்தெறியவும் தமிழர்களின் உரிமைகளுக் காகக் குரல்கொடுக்கவும் உழைத்துவருகிற ஒரே இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். எனவேதான் அந்தக் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டேன். நான் நினைப்பது சரி என்று தோன்றியதால் தி.மு.க. மேடைகளுக்கு வந்தேன். அதன் விளைவுகளை சந்திக்கத் தயாராக இருப்பதால்தான், துணிச்சலாக தி.மு.க.வின் அரசியல் மேடைகளில் ஏறுகிறேன்.

உங்களுக்குப் பிடித்த இலக்கியவாதி யார்?

புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன். மொழிப் பற்று, மூட நம்பிக்கை ஒழிப்பு, அழகியல் என எல்லா அம்சங்களும் கலந்த பாடல்களை எழுதி தமிழ் உணர்வை யும் ஊட்டி தமிழர்களைத் தட்டி எழுப்பியவர் அவர். அவரது "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்ற பாடலைப் பாடிதான் எனது எல்லாப் பட்டிமன்ற பேச்சுகளையும் நான் தொடங்குகிறேன்.

நீங்கள் சமீபத்தில் ரசித்த படைப்பு எது?

பேராசிரியர் சுப. வீரபாண்டி யன் எழுதிய "திராவிடத்தால் எழுந்தோம்' என்ற நூல்தான் நான் சமீபத்தில் படித்து, ரசித்து, சிந்திக்கத் தொடங்கிய நூல். திராவிட இயக்க வரலாற்றையும் திராவிட இயக்கம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங் களையும் அந்த நூல் அற்புதமாக விளக்குகிறது. பஞ்சமர்களுக்கும்  பெண்களுக்கும் சுயமரியாதை யைப் பெற்றுக் கொடுத்த தோடு, அவர்களை இருளில் இருந்து மீட்டெடுத்த இயக் கம் திராவிட இயக்கம்  என்பது போன்ற தகவல் களை அழகாக மனதில் பதியும் வண்ணம் இந்த நூலில் விதைத் திருக்கிறார் சுப.வீ. எனக் குள் ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் என்று கூட இதைச் சொல்லலாம்.

திரைப்படப் பாடல்களை மேடைகளில் அலசி ஆராய்கிற உங்களுக்கு, யாருடைய பாடல்கள் பிடிக்கும்?

அன்று முதல் இன்றுவரை நான் ரசிப்பது, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களைத்தான். ஆழமான சிந்தனைகளை எளிய தமிழில் வெளியிட்டவர் அவர். பொதுவுடமைச் சிந்தனைகளை மிக எளிமையாகவும் அழுத்தமாகவும் பிரகடனப்படுத்தும் பாடல்கள் அவருடையவை. கல்யாணப் பரிசு படத்தில் "துள்ளாத மனமும் துள்ளும்' என்ற பாடலில் "துன்பக் கடலைத் தாண்டும்போது தோணியாவது கீதம்' என்ற வரிகளில் மிகச் சிறந்த கற்பனையை அள்ளிவீசியிருப்பார். இப்போது  அப்படிப்பட்ட பாடல்களை அதிகம்  கேட்க முடிவதில்லை. இப்போது வரும் பாடல்களில் பெரும்பாலானவை வெறும் டண்டனக்காதான்.

உங்கள் திரையுலக அனுபவங்கள் எப்படி?

நான் நடித்த ஒரே படம் "கங்கா கௌரி'. நடிகர் அருண் விஜய், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருக்கு அப்பாவாக நடித்தேன். ஒரு திரைப்பட நடிகனின் வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானது என்பதை அந்த ஒரே படத்தில் உணர்ந்துகொண்டேன். என்னை இயக்கிய இயக்குநர் மாதேஷ்வரன், தயாரிப்பாளர் விஷ்ணுராம் ஆகியோரை வாழ்நாள் முழுக்க என்னால் மறக்க முடியாது.

உங்களை வியக்க வைப்பவர்கள் யார்?

ஒருவர் கலைஞர். காரணம் 89 வயதிலும் ஓயாத உழைப்பும் அதீத நினைவாற்றல் கொண்டவராகவும் இருக்கிறார். இந்த வயதிலும் தொண்டர்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறார். தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அவரது புன்னகை உதிர்வதே இல்லை. அவரது தன்னம்பிக்கை எவருக்கும் வராது.

இன்னொருவர்  கவியரசு கண்ணதாசன். உயர் நிலை வகுப்பைக்கூடத் தாண்டாத முத்தையா என்ற கிராமத்து வாசி, காலத்தால் அழியாத திரைக் காவியங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

அதோடு அவர் எண்ணற்ற புத்தகங்களை எழுதி தமிழிலக்கியத்தையே திகைக்க வைத்திருக்கிறார்.

அடுத்தவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன். நகைச்சுவைக் கருத்துகள் மூலம் நாட்டுக்குத் தேவையான கருத்துகளை முற்போக்காகக் கூறியவர் அவர். அவரது இசையாற்றலும் வியக்கவைப்பதாகும். இதைவிட எல்லா நேரத்திலும் எந்த நிலையிலும் எவருக்கும் உதவக்கூடிய அவரது கொடைக்குணம் என்னை வியக்கவும் நெகிழவும் வைக்கிறது.

நீங்கள் நினைத்து நினைத்து சிரித்த விசயம் எது?

தூத்துக்குடி அருகில் கீழஈரால்  பக்கம் ஒரு கிராமம். அங்கு எங்களது பட்டிமன்றம் நடந்தது.

அப்போது எங்கள் குழுவைச் சேர்ந்த பேச்சாளர்  வதிலை ராஜா  பேச எழுந்தபோது, மேடையே  ஒரு குலுங்கு குலுங்கி பின்னோக்கி நகரத் தொடங்கி விட்டது. காரணம் மிகவும் குண்டான அவரது எடையை அந்த டிராக்டர் டிரெய்லர்மீது அமைக்கப் பட்ட மேடையால் தாங்க முடியவில்லை.  அப்பப்பா அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு குபீரென்று பொத்துக்கொண்டு வருகிறது.

உங்கள் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்?

ஈழத் தமிழர்கள் போர்க்களத்தில் இருந்தபோது அவர்களுக்கு நிதி திரட்ட ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிற்கும் போய் வந்தேன். தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு பகுதிகளில் எங்கள் நிகழ்ச்சிகளை நடத்தி ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக் கான நிதியைத்  திரட்டினேன். இவற்றையே எனது சாதனைகளாகக் கருதுகிறேன்.

சிறந்த பேச்சாளராக விரும்பும் இளைய தலைமுறையினருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தாழ்வு மனப்பான்மையை நீக்கி, தன்னம்பிக்கை யோடு மேடை ஏறுங்கள். ஒவ்வொரு மேடையையும் புது மேடையாகக் கருதுங்கள். மடை திறந்தாற்போல் பேச்சு வர, நிறைய நூல்களைப் படியுங்கள். உங்களுக் கென்று தனி பாணியை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

உங்கள் வெற்றியின் ரகசியம் எது?

தன்னம்பிக்கை, பணிவு, எளிமை. அதைவிட எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் குணம்.

நேர்காணல்: அமுதா தமிழ்நாடன்


நன்றி: நக்கீரன் 
01.11.2012 

Friday, August 1, 2014

சிறகுகளில்லாத பறவை - கவிக்கோ அப்துல் ரகுமான்

 
 
 
 


 
நன்றி : நக்கீரன் 
               01.09.2012
 
 சிறகுகளில்லாத பறவை  - கவிக்கோ அப்துல் ரகுமான்
 

Sunday, July 13, 2014

அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

 

 

 
  

நன்றி : நக்கீரன் 
               01.08.2012
அழகே ஆண்டவன் - கவிக்கோ அப்துல் ரகுமான்

Sunday, July 6, 2014

அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி.

              கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த  பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. "இனிய உதய'த்திற்காக அவரைச் சந்தித்தபோது...

எப்படி இப்படியொரு தமிழ்நடை உங்களுக்கு வாய்த்தது? 
நடத்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடை அமைவதுபோலவே, எழுத்திலும் அமைகிறது. என் எழுத்து நடையில் அமைந்தது பாதி; நான் அமைத்தது பாதி. உரைநடையின் இறுக்கம் குறைக்கக் கொஞ்சம் கவிதை பெய்துகொண்டதில் ஒரு புதிய நடை உண்டாகியிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

உங்கள் பால்ய பருவத்தின் மறக்க முடியாத அனுபவம்?

ஒரு கொலை பார்த்தது- ஒரு புணர்ச்சி பார்த்தது- 11 வயதில் வெறிநாய் கடித்தது- மூன்றும் அறியாத வயதின் அதிர்ச்சிகள்.

நீங்கள் எழுதிய முதல் கவிதை?

வயல்வெளியில் பிறந்தது. அது கவிதையா- கவிதைபோல் ஒரு மொழிமுனகலா என்று எனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. கவிதை கையில் இல்லை. அந்தப் பரவசம் மட்டும் பத்திரமாக.

திரையுலகக் காதலில் விழுந்தது எப்படி?

"டூரிங் டாக்கீஸ்' என்ற கலைக் கூடங்களே காரணம்; காற்றில் ஒலித்த பாடல்களே காரணம். கலைஞரின் வசன இலக்கியம்; எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற கந்தர்வ புருஷர்கள்; கண்ணதாசன் என்ற கலையாளுமை இவையே திரைக்காதலுக்குத் தோற்றுவாய் செய்தன. ஐம்பதுகளில் பிறந்த தமிழர்கள் பலருக்கும் இந்த நான்கு பேரின் பாதிப்பு இல்லாமல் இருக்காது.

நீங்கள் சந்தித்த முதல் திரைப் பிரபலம் யார்? அப்போதைய  உங்கள் மன நிலை?

நடிகர் அசோகன். டிரஸ்ட்புரத்தில் இரண்டாம் தெருவில் அவர். நான்காம் தெருவில் நான். நடைப் பயிற்சியில் சந்தித்து நண்பர்கள் ஆனோம். படப் பிடிப்புக்கெல்லாம் அவர் காரில் என்னை அழைத்துச் செல்வார். மதுரை திருமாறன்- கே.ஆர். விஜயா இருவரையும் எனக்கு அறிமுகம் செய்தார். திரைத்துறைக்கு நான் வருவேன் என்பதை அறியாத காலத்தில் அன்பு செலுத்தினார்; அவரை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

திரையுலகில் ஏமாற்றங்களையும் சங்கடங்களையும் சந்தித்தது உண்டா?

ஏமாற்றங்களும் சங்கடங்களும் அனுபவங்கள். அனுபவங்களே ஆசான்கள். "இதுவரை நான்' இரண்டாம் பாகத்தில் விரிவாய் எழுதுவேன்.

மரபை வசீகரமாகக் கையாளும் நீங்கள், புதுக் கவிதைக்கு ஏன் திசை திரும்பினீர்கள்?

ரயிலில் வந்தவன் விமானத்திற்கு மாறிய கதைதான் அது.

உங்கள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

சாதனை என்று எதைக் கருதினாலும் அது இன்று அல்லது நாளை முறியடிக்கப்பட்டுவிடும். சாதனை என்பதைவிட ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்பதே அது.


உங்கள் ஆதங்கம்?

எட்டுக் கோடித் தமிழர்கள் உள்ள நாட்டில், ஒரு புத்தகத்தின் ஆயிரம் பிரதிகள் கூட விலை போகாதது.

உங்கள் ஏக்கம்?

இலங்கைத் தமிழர் துயரம் எப்போது தீரும்?

 
உங்கள் இழப்பு?


தூக்கம்.

உங்கள் அடுத்த இலக்கு?

உங்களுக்கே தெரியும்.

உங்களை வியப்பில் ஆழ்த்திய படைப்பு?

இந்திய இதிகாசங்கள் இரண்டும்.

உங்களுக்கு யார்மீதாவது பொறாமை வந்ததுண்டா?

கோபம் வந்ததுண்டு; பொறாமை என்றால் என்ன?

உலகத் தரத்தில் தமிழிலக்கியம் இருக்கும் போது மேலைநாட்டு இலக்கியங்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் பற்றி?

முதலில் தன்னை மதிப்பது நல்லது; பிறகு தரணியை மதிப்பது உயர்ந்தது.

காலப்போக்கில் மரபுக் கவிதை காணாமல் போய்விடுமா?

தமிழ் காணாமல் போகுமா?

திரையுலகிற்கு முன் இருந்த வைரமுத்து, திரையுலகிற்குள் வந்த பின்னால் வைரமுத்து- ஒப்பிடுங்கள்.

முன்னவன்- நேரத்தில் பணக்காரன்.


பின்னவன்- நேரத்தில் ஏழை.

அரசியலில் கால் வைக்காமல் இருப்பது ஏன்?

என்னினும் சிறந்தவர்கள் அரசியலை ஆளுவதால்.

இலக்கியம், மொழியின் அலங்காரமா? ஆயுதமா?

துய்ப்பதற்கு அலங்காரம்; தொழிற்பட ஆயுதம்.

"மூன்றாம் உலகப் போர்' எப்போது நூலாக வெளிவரும்?

ஜூலை 13. சென்னை காமராசர் அரங்கில் வெளி யீட்டு விழா. இந்திய அரசியலின் மூத்த தலைவரும், தமிழின் மூத்த படைப்பாளியுமான கலைஞர் வெளியிடுகிறார். "மூன்றாம் உலகப்போர்' ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகி வருகிறது. அது சர்வ தேச அரங்கில் வெளியிடப் பெறும்.

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்


நன்றி : நக்கீரன் 
              01.07.2012

இணைப்பு : அறியாத வயதின் அதிர்ச்சிகள் - கவியரசு வைரமுத்துவின் நறுக் பேட்டி.

Thursday, July 3, 2014

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்.

இலங்கையின் மலையகத்தின் மூத்த பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ளும் முகமாக இலங்கையின் பிரபல நாளிதழான "தினகரன்" இல் வெளியான கட்டுரை இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. கட்டுரையாளர் "ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் ஆவார்.

********

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்.

தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியி ருந்தது. அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற் றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை. இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தி யானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.

 தொடர்ந்து இந்த நூலின் அறிமுக விழாக்கள் நாட்டின் சகல பாகங்களிலும் இடம் பெற்றன. முப்பதுக்கும் குறையாத இடங்களில் இந்த அறிமுக விழாக்கள் நடைபெற்றன. கம்பளை நகர மண்ட பத்தில் 17-02-80இல் இந்த நூலுக்கு ஓர் அறிமுகவிழா இடம்பெற்றது. கம்பளை இந்து கலாசாரப் பேரவை யின் தலைவர் க. முருகேசுவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழா வில் கே. எஸ். சிவகுமாரன், இர. சிவ லிங்கம், கே. வெள்ளைச்சாமி, இஸ்மா லிகா ஆகியோர் கருத்துரை வழங்கி னர். புசல்லாவை நியூபீகொக் பெருந் தோட்டத்தில் வைத்திய அதிகாரியாக அப்போது தொழில் புரிந்து கொண்டி ருந்த நான் அவ்விழாவுக்குப் பார்வை யாளனாகச் சென்றிருந்தேன்.
விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவின் இடையிலே விழாத்தலைவர் பார்வையாளனாகச் சபையிலே இருந்த என்னைக் கவனித் துவிட்டு, இங்கு ‘காலதரிசனம்’ சிறு கதைத் தொகுதியின் ஆசிரியர் எழுத் தாளர் தி. ஞானசேகரன் வந்திருக்கிறார் அவரும் சில வார்த்தைகள் பேசுவார் என என்னை மேடைக்கு அழைத்து விட்டார்.

ஏற்கனவே நான் தெளிவத்தை ஜோசப் பின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்த வன். ‘பாட்டி சொன்ன கதை’ ‘பழம் விழுந்தது’, ‘பாபசங்கீர்த்தனம்’ ஆகிய கதைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவன். எனவே அக்கதைகள் பற்றி சிலாகித் துப் பேசினேன். ஜோசப்பின் கதைக ளின் கருக்கள், உரைநடைகள் பற்றி யெல்லாம் சிறப்பாக எடுத்துக் கூறினேன். அக்காலகட்டத்தில் தமிழக சஞ்சிகை யான கலைமகள் வெளிவந்தால் நான் கையில் எடுத்தவுடன் தெளிவத்தையின் கதைகள் ஏதாவது வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்ப்பவன். இவற்றையெல் லாம் எனது பேச்சில் குறிப்பிட்டேன். கூட்டம் முடிந்ததும் தெளிவத்தையைச் சந்தித்து எனது வாழ்த்துக்களைத் தெரி வித்து, நான் வாங்கிய நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதியில், ‘அன்பு டன் தெளிவத்தை ஜோசப் 17-02-80 என்ற குறிப்பினையும் பெற்றுக்கொண் டேன். இதுவே ஜோசப்பினுடனான எனது முதற் சந்திப்பு!

தொடர்ந்து வந்த காலப் பகுதியில் கம்பளையில் நடந்த எனது ‘குருதிமலை’ நாவல் வெளியீட்டில் தெளிவத்தை ஜோசப் வந்து விமர்சனம் செய்திருக்கிறார். மலையக கலை இலக்கியப் பேரவை தனது 15 ஆவது ஆண்டுவிழாவை கண்டியில் பெருவிழாவாக நடத்தியது. தமிழக எழுத்தாளர்களான வல்லிக் கண்ணன், தாமரை மகேந்திரன், பொன்னீலன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் கெளரவம் பெற்றவர்கள் பட்டியலில் நானும் தெளிவத்தையும் இருந்தோம். அவ்விழாவுக்கு வந்த தெளிவத்தை, அந்தனிஜீவா, சாரல்நாடன், குறிஞ்சித் தென்னவன் ஆகியோர் அன்று கண்டியில் எனது இல்லத்தில் தங்கி இலக்கியம் பேசியது இனிமையான நிகழ்வு.

மறுநாள் புசல்லாவையில் 14-7-1996ல் நடைபெற்ற எனது ‘கவ்வாத்து’ குறுநாவல் அறிமுக விழாவிலும் இவர்கள் நால்வரும் கலந்து சிறப்பித்தனர்.
நான் ‘ஞானம்’ சஞ்சிகையை ஆரம்பித்து கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டபின் எனக்கும் தெளிவத்தைக்குமான நெருக்கம் அதிகமாகியுள்ளது.
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்து மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் தனது எழுத்துக்கள் மூலம் பெரும் பங்காற்றி மலையக இலக்கியத்தின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் தெளிவத்தை ஜோசப்.
இவரது நாவலான ‘காலங்கள் சாவதில்லை’ 1974ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டின் சாகித்தியப் பரிசுக்கு இந்நாவல் தெரிவு செய்யப்பட்ட போதும் அக்கால இலக்கியச் சட்டம்பிகளால் பரிசுத் தேர்விலிருந்தும் நிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதோடு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த ஜோசப், காலப் போக்கில் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு, திரைப்படக்கதை தொலைக்காட்சி, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் தனது உழைப்பை விஸ்தரித்து மலையக இலக்கியத்தை, அதனூடாக ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தியதோடு உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் உரம் சேர்ந்தவர்.

பிற மாநிலத்தவர்கள் மலையகம் பற்றி அறிய வேண்டுமானால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளைப் படித்தாலே போதுமானது. அந்தளவுக்கு மலையக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார முறைகள் இவரது படைப்புகளுள் பொதிந்துள்ளன. தெளிவத்தை ஜோசப் அளவுக்கு மற்றைய மலையக எழுத்தாளர்கள் முழுமையாக மலையகத்தைத் தமது படைப்புகளில் வெளிக்கொணரவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.

இவர் ஆரம்பத்தில் தேளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டவர். தெளிவத்தை ஜோசப் தோட்டத்து வாத்தியாராக இருந்த காலத்தில் அவர் எழுதிய கதைகள், தோட்டத்து மக்கள் பற்றிய இவரது படைப்புகள் அந்த மக்களைச் சீண்டி சீற்றம் கொள்ளச் செய்தன. உத்தியோகத்தர்கள் பற்றிய கதைகள் அவர்களை முகம் திருப்பிக்கொள்ள வைத்தன. தெளிவத்தையில் இருக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதால் 1964ல் கொழும்புக்கு வந்து சேர்ந்தார் ஜோசப்.

இவரது கதைகள் வீரகேசரி- மலைமுரசு, மலைப்பொறி, சுதந்திரன், கலைச்செல்வி, தேனருவி, ஈழநாடு, கதம்பம், மாணிக்கம், தமிழமுது, செய்தி, அல்லி, மல்லிகை, ஞானம், தமிழகச் சஞ்சிகைகளான உமா, கலைமகள் ஆகியவற்றிலும் இன்னும் பிறவற்றிலும் வெளியாகியுள்ளன.
1980களின் பின்னர் இவர் ஒரு புனைகதையாளனாக மட்டும் இல்லாமல் நிறைய எழுத்துப் பணிகளைப் பல்வேறு துறைகளில் மேற்கொண்டார். இவற்றுள் தினகரன் வாரமஞ்சரியில் இவர் எழுதிய “வாரம் ஒரு சிறுகதை விருந்து” முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளரை அவர் எழுதிய சிறுகதையுடன் அறிமுகப் படுத்தினார். ஒரு இலங்கை எழுத்தாளர், ஒரு தமிழக எழுத்தாளர் என மாறி மாறி இடம்பெற்ற இப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர் களைப் புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை புதிய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். இலக்கியப் பணியாளர்கள் பற்றி விரிவான ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதினார்.

2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ இவரை ஓர் சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. அவ்வாண்டிற்கான தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.
துரைவி பதிப்பகத்தினூடாக இவர் வெளிக்கொணர்ந்த மலையகச் சிறுகதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு தொகுப்புகள் மலையக இலக்கியத்துக்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபதுவருட காலத்துக்குரிய கதைகளைத் தேடித் தொகுத்து இரண்டு வருட கால எல்லையுள் இப்பணியினைச் செய்து சாதனை படைத்தவர் ஜோசப்.
இவரது குறுநாவல்களான ‘பாலாயி’ ‘ஞாயிறு வந்தது’ ‘மனம் வெளுக்க’ ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக 1997ல் வெளிவந்தது. தமிழ் நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல்’ இரண்டாவது பரிசினைப் பெற்றது. இக்குறுநாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது.
இவற்றைவிட “நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்” (நாவல்) ‘மலையக நாவல் வரலாறும் வளர்ச்சியும்” ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியல்” (ஆய்வுகள்) ஆகிய நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

தெளிவத்தை ஜோசப்பின் வாழ்வை யும் இலக்கியப் பணிகளையும் வெளிக் கொணரும் வண்ணம் தற்போது அவரது பவளவிழா ஆண்டில் அவரது நேர்காணல் தொடர்ஞானம் சஞ்சிகையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தெளிவத்தை ஜோசப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமது இலக்கியப் பணிகளை மென்மேலும் தொடர வாழ்த்துவோமாக!