Thursday, September 23, 2010

உலக அழிவு எப்படி இருக்கும்?

தூறல் - 04 
இப்போது உலகம் அழியுமா,இல்லையா என்கிற வாதங்களைப் புறந்தள்ளி ஒரு புதிய விவாதம் தொடங்கியிருக்கிறது.  உலகம் அழியாவிட்டால் உலகம் தன்பாட்டில் வழமை போல் இயங்கிக் கொண்டிருக்கும்.  ஆனால் அழிந்தால்? அழிவை நோக்கிய நகர்வுகள் எப்படி இருக்கும்? உலக அழிவின் இறுதிக் கணங்கள் எவ்வாறானவை? உலக அழிவு எதனால் ஏற்படும்? இவை தான் புதிய விவாதத்தை வழி நடத்திச் செல்லும் கேள்விகளாக இருக்கின்றன. ஒரு பக்கம் விஞ்ஞானிகள் தமது யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க மறு பக்கம் திரைப் படங்களும் தம் பங்கிற்கு தமது யூகங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. விஞ்ஞானிகளின் யூகங்கள் பலவாறாக இருக்கின்றன. 


யூகம் 01 : டினோசர் என்ற விலங்கினத்தின் அழிவுக்கு ஒரு விண்கல் காரணமாயிருந்ததைப்  போன்று எதிர்காலத்தில் வரப் போகும் விண்கல்லானது ஒட்டு மொத்த மனித இனத்தின் அழிவுக்கும் காரணமாயிருக்கும்.


 யூகம் 02 : வேற்றுக்கிரகவாசிகள் உலகை அழிக்க படையெடுத்து வருவார்களாம். அதாவது வேற்றுக்கிரகவாசிகள் தொழிநுட்பத்தில் நம்மைவிட கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கணிப்பிடப்படுகிறது. ஆகவே ,பூமியை நோக்கி வரக்கூடிய அவர்கள் பூமியை அழித்து தமது பலத்தை நிலைநாட்ட முயற்சிக்கலாம்.  


யூகம் 03 : மனிதனால் உருவாக்கப்பட்ட இயந்திர மனிதனே (Robot) மனிதர்களையும் இந்த உலகத்தையும் அழிக்க முற்படலாம். ஏனெனில் இயந்திர மனிதனுக்கு சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் ஆற்றலை வழங்க தொழி நுட்பவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். அவற்றின் சுய சிந்தனை மனிதனை அழிக்க வேண்டும் என்று தீர்மானித்தால்? 


யூகம் 04 : அம்மை நோய், சார்ஸ், பறவைக் காய்ச்சல் போன்று நுண்ணுயிர்க் கிருமிகளினால் பாரிய - மனிதனால் கட்டுப் படுத்த முடியாத நோயொன்று உலகம் முழுவதும் பரவுவதன் மூலம் பாரிய அழிவொன்று ஏற்படலாம். 


                   இந்த நான்கு காரணிகள் மட்டுமல்ல, இன்னும் பல காரணிகள் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள்.சில வேளை உலக அழிவுக்கு நீங்கள் கூட ஒரு காரணமாயிருக்கலாம். இப்போது உங்கள் மூளை என்ன யூகிக்கிறது? 'கடவுளே! உலக அழிவுக்கு முன்னாடி நான் செத்துப் போயிடணும்!?' .
       

Wednesday, September 8, 2010

வாழ்க்கை அற்பமானதா?

தூறல்- 03 
'இந்த வாழ்க்கை , உடம்பு, உறவுகள், சொத்துக்கள் என எல்லாமே அற்பமானவை. சொர்க்க வாழ்க்கை ஒன்றே உண்மையானது. இந்த அற்பமான வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.'- எல்லா சமயங்களுமே இப்படித்தான் நமக்குப் போதிக்கின்றன. காலத்துக்குக் காலம் பல சமய அறிஞர்களும் இதனை வலியுறுத்தி வந்துள்ளனர். சமயங்களும் அதனைப் போதிப்பவர்களும் சொல்வது போல வாழ்க்கை அற்பமானதா? 


                      நமது பிறப்பையும் இறப்பையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை நம்மால்  தீர்மானிக்க முடியும். 

                                          ஒரு கணம் இன்றைய உலகத்தை உங்கள் மனக்கண் முன் கொண்ண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். என்னுடைய 'தூறல்களைப்' போல மணம் வீசிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் வலைப் பூக்கள், உலகையே தன் கைக்குள் அடக்கி வைத்திருக்கும் இணையம், அந்த இணையத்தையும் மிஞ்சி விடத் துடிக்கும் கையடக்கத் தொலைபேசிகள், பிரம்மாண்டத் தொழிநுட்பங்கள், வானளாவ உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் என்று எண்ணற்ற அதிசயங்கள் உங்கள் மனக் கண்ணில் விரியும்.   

                            இவ்வளவு அற்புதங்களையும் உருவாக்கியது 'அற்பமான வாழ்க்கை' யை வாழ்ந்து கொன்ன்டிருக்கும் மனிதன் தான். எல்லாமே மனிதனின் முயற்சியால் உருவானது தானே? இதை யாராவது மறுக்கப் போகிறீர்களா? அல்லது இதற்குப் பின்னும் வாழ்க்கை அற்பமானதென்று யாராவது சொல்வீர்களா? அது மட்டுமல்ல, இது வரை உங்களில் யாராவது சொர்க்கத்தை நேரடியாகப் பார்த்ததுண்டா? அல்லது மரணத்திற்குப் பின் இன்னதுதான் நடக்கும் என்று உங்களால் நிச்சயித்துக் கூற முடியுமா? இல்லை! நிச்சயமில்லாத சொர்க்கத்திற்காக இருக்கின்ற வாழ்க்கையை நரகமாக்க வேண்டுமா? ஆகவே, இன்றே வாழ்க்கையை வாழுங்கள். அற்பமானதென்று சொல்லி விலகி ஓடாதீர்கள். வாழ்க்கை அற்பமானதல்ல - அற்புதமானது!        
                            

Monday, September 6, 2010

விதியை நம்புகிறீர்களா?

தூறல்  - 02                 
  

'சே!எல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள். 


                      அதென்ன விதி? அதனை எழுதுவது யார்? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கிறதா? நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள்? குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா? உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா? கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு  விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்?
மேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளும், இந்துப் பையனை திருமணம் செய்வாய் என்று கிறிஸ்தவக் கடவுளும் விதிஎழுத முடியுமா? அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன? நம்முடைய தவறுகளுக்கு விதியை காரணம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே விதியை நம்புவதை விடுத்து மதியை நம்புங்கள். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும்! 

Friday, September 3, 2010

உலகம் அழியப் போகிறதா?

தூறல் 1

2012 டிசம்பர் 21  ஆம் திகதி உலகம் அழியும் என்று கணிப்பிடப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. இது உண்மையா, இல்லையா என்பது தொடர்பாக பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன. மத்திய அமெரிக்காவில் முன்னொரு காலத்தில் காணப் பட்ட 'மாயன் நாட்காட்டி'இலேயே மேற்படி உலக அழிவுக்கான திகதி குறிக்கப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. 

இப்படிதான் 2000  ஆம் ஆண்டில் உலகம் அழியும் என்று பைபிளில் குறிப்பிடப் பட்டுள்ளதாக சிலர் வதந்தியைப் பரப்பினர் . ஆனால் அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல.இந்த 'உலக அழிவை எதிர்வுகூறும்' மாயன் நாட்காட்டியை உருவாக்கிய மாயன்  நாகரிகம் இப்போது முற்றாக அழிந்து விட்டதாம் . தமது சமூகத்தின் அழிவையே கணிக்க முடியாத இவர்களால் உலக அழிவை எப்படி எதிர்வு கூற முடியும் என்று சிலர் வினவுகிறார்கள். விஞ்ஞானிகளே இது தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தமது மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள்கிறார்களாம் . 

இந்தச் செய்தி வெளியானதில் இருந்து செவ்வாய்க்  கிரகத்திலும் நிலவிலும் காணி விற்பனை மிக வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருகிறது. 'என்னது? செவ்வாயில் காணி விற்பனையா?' என்று அதிசயப் படுகிறீர்களா?  இதென்ன பிரமாதம்,செவ்வாய்க் கிரகத்தில் நான் வாங்கிய காணியில் புதிதாக ஒரு வீடு கட்டி இருக்கிறேன். அடுத்த வாரம் பால் காய்ச்சப் போகிறேன். முகவரி சொல்றேன், அவசியம் வீட்டுக்கு வந்துட்டுப் போங்க. 
சிகரம் பாரதி ,இல:100  , செவ்வாய் குறுக்குச் சந்து ( பேருந்துநிலையம் அருகில்) , செவ்வாய். வருவீங்கல்ல?!?!?!?!?