Thursday, July 3, 2014

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்.

இலங்கையின் மலையகத்தின் மூத்த பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ளும் முகமாக இலங்கையின் பிரபல நாளிதழான "தினகரன்" இல் வெளியான கட்டுரை இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. கட்டுரையாளர் "ஞானம்" சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் ஆவார்.

********

தி.ஞானசேகரனின் பார்வையில் தெளிவத்தை ஜோசப்.

தெளிவத்தை ஜோசப்பை நான் முதன் முதலில் சந்தித்த நாள் இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அவரது ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுதி 1971 டிசம்பரில் வெளியாகியி ருந்தது. அதன் வெளியீட்டு விழா யாழ் றிம்பர் மண்டபத்தில் கவிஞர் முருகையன் தலைமையில் இடம்பெற் றது. ஒரு மலையக நூலின் வெளியீட் டுவிழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது அதுவே முதற் தடவை. இவ்விழாவில் நூலின் வெளியீட்டுரையை மு. நித்தி யானந்தனும் விமர்சன உரைகளை பேராசிரியர் கைலாசபதியும் டொமினிக் ஜீவாவும் நிகழ்த்தினர்.

 தொடர்ந்து இந்த நூலின் அறிமுக விழாக்கள் நாட்டின் சகல பாகங்களிலும் இடம் பெற்றன. முப்பதுக்கும் குறையாத இடங்களில் இந்த அறிமுக விழாக்கள் நடைபெற்றன. கம்பளை நகர மண்ட பத்தில் 17-02-80இல் இந்த நூலுக்கு ஓர் அறிமுகவிழா இடம்பெற்றது. கம்பளை இந்து கலாசாரப் பேரவை யின் தலைவர் க. முருகேசுவின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழா வில் கே. எஸ். சிவகுமாரன், இர. சிவ லிங்கம், கே. வெள்ளைச்சாமி, இஸ்மா லிகா ஆகியோர் கருத்துரை வழங்கி னர். புசல்லாவை நியூபீகொக் பெருந் தோட்டத்தில் வைத்திய அதிகாரியாக அப்போது தொழில் புரிந்து கொண்டி ருந்த நான் அவ்விழாவுக்குப் பார்வை யாளனாகச் சென்றிருந்தேன்.
விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விழாவின் இடையிலே விழாத்தலைவர் பார்வையாளனாகச் சபையிலே இருந்த என்னைக் கவனித் துவிட்டு, இங்கு ‘காலதரிசனம்’ சிறு கதைத் தொகுதியின் ஆசிரியர் எழுத் தாளர் தி. ஞானசேகரன் வந்திருக்கிறார் அவரும் சில வார்த்தைகள் பேசுவார் என என்னை மேடைக்கு அழைத்து விட்டார்.

ஏற்கனவே நான் தெளிவத்தை ஜோசப் பின் எழுத்துக்களால் கவரப்பட்டிருந்த வன். ‘பாட்டி சொன்ன கதை’ ‘பழம் விழுந்தது’, ‘பாபசங்கீர்த்தனம்’ ஆகிய கதைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தவன். எனவே அக்கதைகள் பற்றி சிலாகித் துப் பேசினேன். ஜோசப்பின் கதைக ளின் கருக்கள், உரைநடைகள் பற்றி யெல்லாம் சிறப்பாக எடுத்துக் கூறினேன். அக்காலகட்டத்தில் தமிழக சஞ்சிகை யான கலைமகள் வெளிவந்தால் நான் கையில் எடுத்தவுடன் தெளிவத்தையின் கதைகள் ஏதாவது வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்ப்பவன். இவற்றையெல் லாம் எனது பேச்சில் குறிப்பிட்டேன். கூட்டம் முடிந்ததும் தெளிவத்தையைச் சந்தித்து எனது வாழ்த்துக்களைத் தெரி வித்து, நான் வாங்கிய நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதியில், ‘அன்பு டன் தெளிவத்தை ஜோசப் 17-02-80 என்ற குறிப்பினையும் பெற்றுக்கொண் டேன். இதுவே ஜோசப்பினுடனான எனது முதற் சந்திப்பு!

தொடர்ந்து வந்த காலப் பகுதியில் கம்பளையில் நடந்த எனது ‘குருதிமலை’ நாவல் வெளியீட்டில் தெளிவத்தை ஜோசப் வந்து விமர்சனம் செய்திருக்கிறார். மலையக கலை இலக்கியப் பேரவை தனது 15 ஆவது ஆண்டுவிழாவை கண்டியில் பெருவிழாவாக நடத்தியது. தமிழக எழுத்தாளர்களான வல்லிக் கண்ணன், தாமரை மகேந்திரன், பொன்னீலன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் கெளரவம் பெற்றவர்கள் பட்டியலில் நானும் தெளிவத்தையும் இருந்தோம். அவ்விழாவுக்கு வந்த தெளிவத்தை, அந்தனிஜீவா, சாரல்நாடன், குறிஞ்சித் தென்னவன் ஆகியோர் அன்று கண்டியில் எனது இல்லத்தில் தங்கி இலக்கியம் பேசியது இனிமையான நிகழ்வு.

மறுநாள் புசல்லாவையில் 14-7-1996ல் நடைபெற்ற எனது ‘கவ்வாத்து’ குறுநாவல் அறிமுக விழாவிலும் இவர்கள் நால்வரும் கலந்து சிறப்பித்தனர்.
நான் ‘ஞானம்’ சஞ்சிகையை ஆரம்பித்து கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டபின் எனக்கும் தெளிவத்தைக்குமான நெருக்கம் அதிகமாகியுள்ளது.
கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்து மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் தனது எழுத்துக்கள் மூலம் பெரும் பங்காற்றி மலையக இலக்கியத்தின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் தெளிவத்தை ஜோசப்.
இவரது நாவலான ‘காலங்கள் சாவதில்லை’ 1974ல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டின் சாகித்தியப் பரிசுக்கு இந்நாவல் தெரிவு செய்யப்பட்ட போதும் அக்கால இலக்கியச் சட்டம்பிகளால் பரிசுத் தேர்விலிருந்தும் நிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதோடு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த ஜோசப், காலப் போக்கில் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு, திரைப்படக்கதை தொலைக்காட்சி, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் தனது உழைப்பை விஸ்தரித்து மலையக இலக்கியத்தை, அதனூடாக ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தியதோடு உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் உரம் சேர்ந்தவர்.

பிற மாநிலத்தவர்கள் மலையகம் பற்றி அறிய வேண்டுமானால் தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளைப் படித்தாலே போதுமானது. அந்தளவுக்கு மலையக மக்களின் சமூக, அரசியல், பொருளாதார முறைகள் இவரது படைப்புகளுள் பொதிந்துள்ளன. தெளிவத்தை ஜோசப் அளவுக்கு மற்றைய மலையக எழுத்தாளர்கள் முழுமையாக மலையகத்தைத் தமது படைப்புகளில் வெளிக்கொணரவில்லை என்பது விமர்சகர்களின் கருத்தாகும்.

இவர் ஆரம்பத்தில் தேளிவத்தை என்னும் தோட்டத்தில் ஆசிரியராக இருந்தவர். இதன் காரணமாகவே தனது பெயருடன் தெளிவத்தையையும் இணைத்துக் கொண்டவர். தெளிவத்தை ஜோசப் தோட்டத்து வாத்தியாராக இருந்த காலத்தில் அவர் எழுதிய கதைகள், தோட்டத்து மக்கள் பற்றிய இவரது படைப்புகள் அந்த மக்களைச் சீண்டி சீற்றம் கொள்ளச் செய்தன. உத்தியோகத்தர்கள் பற்றிய கதைகள் அவர்களை முகம் திருப்பிக்கொள்ள வைத்தன. தெளிவத்தையில் இருக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டதால் 1964ல் கொழும்புக்கு வந்து சேர்ந்தார் ஜோசப்.

இவரது கதைகள் வீரகேசரி- மலைமுரசு, மலைப்பொறி, சுதந்திரன், கலைச்செல்வி, தேனருவி, ஈழநாடு, கதம்பம், மாணிக்கம், தமிழமுது, செய்தி, அல்லி, மல்லிகை, ஞானம், தமிழகச் சஞ்சிகைகளான உமா, கலைமகள் ஆகியவற்றிலும் இன்னும் பிறவற்றிலும் வெளியாகியுள்ளன.
1980களின் பின்னர் இவர் ஒரு புனைகதையாளனாக மட்டும் இல்லாமல் நிறைய எழுத்துப் பணிகளைப் பல்வேறு துறைகளில் மேற்கொண்டார். இவற்றுள் தினகரன் வாரமஞ்சரியில் இவர் எழுதிய “வாரம் ஒரு சிறுகதை விருந்து” முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வொரு வாரமும் ஒரு எழுத்தாளரை அவர் எழுதிய சிறுகதையுடன் அறிமுகப் படுத்தினார். ஒரு இலங்கை எழுத்தாளர், ஒரு தமிழக எழுத்தாளர் என மாறி மாறி இடம்பெற்ற இப்பகுதியில் இருநூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர் களைப் புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தினார். அத்தோடு நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை புதிய தலைமுறையினரிடம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டார். இலக்கியப் பணியாளர்கள் பற்றி விரிவான ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதினார்.

2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது ‘மலையகச் சிறுகதை வரலாறு’ இவரை ஓர் சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. அவ்வாண்டிற்கான தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.
துரைவி பதிப்பகத்தினூடாக இவர் வெளிக்கொணர்ந்த மலையகச் சிறுகதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு தொகுப்புகள் மலையக இலக்கியத்துக்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபதுவருட காலத்துக்குரிய கதைகளைத் தேடித் தொகுத்து இரண்டு வருட கால எல்லையுள் இப்பணியினைச் செய்து சாதனை படைத்தவர் ஜோசப்.
இவரது குறுநாவல்களான ‘பாலாயி’ ‘ஞாயிறு வந்தது’ ‘மனம் வெளுக்க’ ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக 1997ல் வெளிவந்தது. தமிழ் நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல்’ இரண்டாவது பரிசினைப் பெற்றது. இக்குறுநாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது.
இவற்றைவிட “நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்” (நாவல்) ‘மலையக நாவல் வரலாறும் வளர்ச்சியும்” ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியல்” (ஆய்வுகள்) ஆகிய நூல்கள் வெளிவரவிருக்கின்றன.

தெளிவத்தை ஜோசப்பின் வாழ்வை யும் இலக்கியப் பணிகளையும் வெளிக் கொணரும் வண்ணம் தற்போது அவரது பவளவிழா ஆண்டில் அவரது நேர்காணல் தொடர்ஞானம் சஞ்சிகையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தெளிவத்தை ஜோசப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து தமது இலக்கியப் பணிகளை மென்மேலும் தொடர வாழ்த்துவோமாக!

2 comments:

 1. தெளிவத்தை ஜோசப்
  ஈழத்தின்
  சிறந்த படைப்பாளி
  பகிர்வுக்குப் பாராட்டுகள்

  ReplyDelete
 2. ஜோசப் அவர்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete