Thursday, May 29, 2014

சூழ்நிலைகளும் மனிதர்களும்!

'தங்களது சூழ்நிலையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று மனிதர்கள் பதற்றப்படுகிறார்கள். ஆனால் தங்களை - தங்கள் எண்ணங்களை - மேம்படுத்திக் கொள்ள அவர்கள் முனைவதில்லை; அக்கறை செலுத்துவதில்லை. ஆதலால் சூழ்நிலையின் கைதிகளாக அவர்கள் வாழ்கின்றனர்.

 

















ஜேம்ஸ் ஆலன் 


 

 



                 குற்றங்குறைகளைத் திருத்திக் கொள்ளத் தயங்காதவர்கள் மட்டுமே , தங்களது ஆழமான ஆசைகளையும் லட்சியங்களையும் அடைகின்றனர்.தெய்வீக விஷயங்களுக்கும் சரி, நடைமுறை உலகிற்கும் சரி, இது பொருந்தும். செல்வம் சேர்ப்பது என்பதில் மட்டுமே குறியாயிருப்பவன் பல தியாகங்களையும் செய்யத் தயாராயிருக்க வேண்டும்.இதற்கே இவ்வளவு தியாகம் செய்ய வேண்டுமென்றால் , வலிமையும் சக்தியும் நிறைந்த தெய்வீக வாழ்வைப் பெற மனிதன் தியாகங்களைச் செய்யவேண்டும்! எண்ணிப்பாருங்கள்.

               இதோ ஒரு மனிதன்.

               வறுமைக் கொடுமையின் பிடியிலகப்பட்டவன். தனது வாழ்க்கை வசதிகள் பெருக வேண்டுமென விரும்புகிறான் ; தன் வறுமைச் சூழ்நிலை மாறவேண்டுமென ஆசைப்படுகிறான். ஆனால் அதற்காக தான் செய்யவேண்டிய வேலையை - அதற்கீடான உழைப்பைக் கொடுக்க அவன் தயாரில்லை ; சண்டித்தனம் செய்கிறான். "எஜமானன் சம்பளம் குறைத்துக் கொடுக்கிறான்!" என்று குறை சொல்லி எஜமானனை ஏமாற்றுகிறான். 'வளமோடு வாழ்வது எப்படி?' என்ற உண்மையின் அடிப்படையை உணராதவன் அவன் ; வறுமையின் பிடியிலிருந்து மீள தகுதியற்றவன்.

 

உண்மையிலேயே இன்னும் அதிகமான வறுமையை ஈர்க்கிறான் - தனது சோம்பேறித்தனத்தினால் - ஏமாற்றும் வாழ்க்கை நெறியால் , ஆண்மைக்கு புறம்பான எண்ணங்களால் , தனது மனோபாவத்தினால்.


இதோ ஒரு பணக்காரன்.

               அவனது மிதமிஞ்சிய சாப்பாட்டின் விளைவாக , தொடர்ந்த நோய்க்கும் வயிற்று வலிக்கும் ஆளாகியவன். நோய் நீங்க எத்தனை பணத்தையும் கொடுக்கத் தயாராயிருக்கிறான். ஆனால் தனது மிதமிஞ்சிய சாப்பாட்டுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. நாக்கு ருசிக்கும் , ஆசைக்கும் அடிமைப்பட்டு , தன் உடலுக்கு ஊறு விளைவிக்கின்ற மனிதன் , உடல் ஆரோக்கியத்தைப் பற்றி ஆசைப்படுவது என்ன நியாயம்? ஆரோக்கிய வாழ்வின் ஆரம்ப பாடத்தைக் கூட இன்னும் அவன் கற்றுக்கொள்ளவில்லை.

 

இதோ ஒரு முதலாளி.

               உழைப்பவனுக்கு உரிய நியாயமான கூலியைக் கொடுக்காமலிருக்கக்கூடிய யுக்தியான வழிகளைக் கண்டு பிடிப்பவன். கூலியைக் குறைத்துக் கொடுத்து , லாபத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்புபவன். அப்படிப்பட்ட மனிதன் வளமான வாழ்வு பெற சிறிதும் அருகதை அற்றவன். தன் புகழுக்கும் செல்வத்திற்கும் கேடு வரும்போது சூழ்நிலையைக் குற்றம் சாட்டுகிறான். "நான்தான் என் நிலைக்குக் காரணம்" என்ற நினைவு கிஞ்சித்தும் இல்லாதவன் அவன். 

                       "அவனவனது சூழ்நிலைக்கு அவனவன் தான் காரணம்" என்ற உண்மையை விளக்க மூன்று உதாரணங்களை காட்டினேன். "தான் செய்யும் காரியங்கள் தான் தனது சூழ்நிலையைப் பாதிக்கின்றன" என்கிற நினைவே இல்லாமல் மனிதன் செயல்படுவதைக் கவனியுங்கள்.

                        ஒவ்வொரு மனிதனும் ஒரு நல்ல விளைவை நோக்கித்தான் பாடுபடுகிறான். ஆனால் அந்த விளைவுகளை எல்லாம் சின்னாபின்னமாக்கும் சிந்தனைகளையும் , செயல்களையும் அவனே ஊக்குவிக்கிறான். இதனால் , தான் விரும்பும் முடிவுகளை அவனால் அடைய முடிவதில்லை ; ஒரு சரியான பாதையில் அவனால் செல்ல முடிவதில்லை.

நன்றி:
தகவல்கள் : - ஜேம்ஸ் ஆலனின் "வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்" ; தமிழாக்கம் - டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி.

"சிகரம்" குழும வாசகர்களுக்காக தொகுத்தளித்தவர் 

அன்புடன்,
சிகரம்பாரதி.

No comments:

Post a Comment